மேலூர் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட மீன்பிடி திருவிழா

மேலூர்: மேலூர் அருகே பாரம்பரிய முறைப்படி ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. மேலூர் அருகே மேலவளவில் உள்ள கருப்பு கோயிலின் அருகே 100 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய பறம்பு கண்மாய் உள்ளது. நீர் வற்றாத நிலையில், கண்மாயில் தண்ணீர் உள்ள நிலையில், அடுத்த விவசாய பணிகள் விரைவில் துவங்க உள்ளதால், இக்கண்மாயில் மீன்பிடி விழா நடைபெறும் என நேற்று முன்தினம் கிராமம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நள்ளிரவு முதலே மேலூர், கொட்டாம்பட்டி, நத்தம், திண்டுக்கல் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்மாயை சுற்றி காத்திருக்க துவங்கினர். அதிகாலையில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கினர். தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்களை பிடிக்க ஆரம்பித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை போன்ற மீன்கள் சிறியது முதல் 5 கிலோ மீன்கள் வரை பிடிபட்டது.

சாதி மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் இணைந்து ஒரே சேர கண்மாயில் மீன்களை பிடித்து, அவற்றை வீட்டிற்கு சென்று இறைவனுக்கு படைத்து உண்டனர். பிடித்த மீன்களை விற்பனை செய்ய கூடாது என்ற ஐதீகம் காரணமாக, நேற்று அவ்வூரில் உள்ள அனைத்து வீடுகளிலும் மீன் குழம்பு வாசனை தூக்கியது. இப்படி பாரம்பரிய முறைப்படி மீன்களை பிடித்து இறைவனுக்கு படைத்தால், மழை பெய்து, விவசாயம் அடுத்த வருடம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.

Related Stories: