புதுகை உசிலங்குளம், ஆவூரில் நடந்த ஜல்லிக்கட்டில் 1,508 காளைகள் சீறி பாய்ந்தன

புதுக்கோட்டை: புதுக்கோட்டை உசிலங்குளம் தடிகொண்ட ஐய்யனாார் கோவில் திடலில் நடந்த ஜல்லிக்கட்டில் 758 காளைகள் பங்கேற்றது. 300 மாடுபிடி வீரர்கள் களம் களம் கண்டனர். இதில் 46 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேல் சிகிச்சைக்காக 8 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே உள்ள ஆவூரில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது.

ஜல்லிக்கட்டை முன்னாள் அமைச்சர் எம்எல்ஏ விஜயபாஸ்கர், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. இதனைதொடர்ந்து மற்ற காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்தபடி சென்றது. இதனை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், வெள்ளி நாணயம், மின் விசிறி, சைக்கிள் மற்றும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல மாவட்டங்களில் இருந்து காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். மொத்தம் 750 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் 300 பேர் களம் கண்டனர். ஜல்லிக்கட்டை காண சுற்றியுள்ள கிராமத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் அதிகம் பேர் வந்திருந்தனர். காளைகளை அடக்கியதில் மாடுபிடி வீரர்கள் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேல் சிகிச்சைக்காக 4 பேர், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: