விராலிமலை, பொன்னமராவதி அருகே மீன்பிடி திருவிழா கோலாகலம்

விராலிமலை: விராலிமலை அருகே உள்ள குளவாய்பட்டி மதிய கருப்பர் கோயிலுக்கு பாத்தியப்பட்ட கருங்குளத்தில் மீன்பிடித் திருவிழா நேற்று( சனிக்கிழமை) நடத்தப்படுவதாக கடந்த ஒரு வாரமாக சமூகவலைதளங்கள் மூலம் செய்தி பரப்பப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை சுற்றுப் பகுதியை சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் அதிகாலை முதலே குளத்தில் திரண்டனர். தாங்கள் கொண்டு வந்திருந்த வலை,கச்சா,பரி,கூடை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களுடன் குளத்திற்குள் போட்டி போட்டுக் கொண்டு இறங்கி மீன்களை தேடினர்.

இதில் ஒரு சில பேரை தவிர மற்றவர்களுக்கு மீன்கள் கிடைக்கவில்லை நீண்டநேரம் குளத்தில் தேடியும் மீன்கள் சிக்காததால் ஏமாற்றத்துடன் அவர்கள் வீடு திரும்பினர். பெரும்பாலும் இதுவரை நடந்த மீன்பிடித் திருவிழாவில் பல நூறு கிலோ மீன்கள் மக்களுக்கு கிடைத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே ஒலியமங்கலம் பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நேற்று நடைப்பெற்றது.

 இதனை முன்னிட்டு ஊர்முக்கியஸ்தர்கள் சாமி வழிபாடு செய்து கண்மாய் கரையில் நின்று வெள்ளை வீசி மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதனையடுத்து தூரி வலை ஊத்தா கச்சா போன்றவைகளுடன் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீன் பிடித்தனர். இதில் விரால் ஜிலேபி கெழுத்தி கட்லா அயிரை உள்ளிட்ட மீன்களை பிடித்து சென்றனர். இதில் புதுக்கோட்டை திருச்சி சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Related Stories: