மாநில எல்லைகளில் சோதனை.! விதிகளுக்கு புறம்பாக குட்கா, பான் மசாலா விற்ற 3,063 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ஓராண்டு காலத்தில் 48 கோடி மதிப்பிலான 102 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆண்டுதோறும் மே 31–ந்தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை,– சமூக ஆன்மிக அமைப்பான பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஐஸ்வர்ய விஷ்வ வித்யாலயாவும் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையும் இணைந்து ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் போதையில்லா தமிழ்நாடு என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் நடைபயணம் நிகழ்ச்சியை இன்று நடத்தின.

இதனை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், மெய்யநாதன் மற்றும் டாக்டர் ரேலா இன்ஸ்டிடூட் அன்ட் மெடிக்கல் சென்டரின் தலைவர் பேராசிரியர் முகமது ரேலா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த நடைபயணம் பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளியில் துவங்கியது. இதில் பல்வேறு வயதைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியதோடு புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளையும் கையில் ஏந்திச் சென்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா சுப்ரமணியன் பேசும்போது, தமிழ்நாட்டை போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதில் முதல்வர் மு.க ஸ்டாலின் முனைப்புடன் இருக்கிறார் .100% போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அந்த வகையில் போதைப் பொருட்கள் விற்பதை அரசு தடை செய்துள்ளது. இதுதொடர்பாக மூவாயிரத்துக்கு மேற்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டு 21 கடைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், உலக புகயிலை நாளை முன்னிட்டு, போதை ஒழிப்பிற்கு விழிப்புணர்வு பேரணி தொடங்கப்பட்டுள்ளது.

2013 மே முதல் குட்கா பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு,  ஓராண்டு காலத்தில் மட்டும் 4.8 கோடி மதிப்பில் 102 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், 36 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் பிரத்யேக மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விதிகளுக்கு புறம்பாக குட்கா, பான் மசாலா விற்ற 3,063 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகளிலும் சோதனை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் பிரியா வேளச்சேரி எம்.எல்.ஏ.அசன் மௌலானா பண்ருட்டி, வாழ்வுரிமை கட்சி தலைவர் எம்.எல்.ஏ. வேல்முருகன்,ரேலா மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: