கட்டுப்பாட்டை இழந்ததால் 70 அடி ஆழ கிணற்றில் வேன் விழுந்து விபத்து:நீச்சல் தெரிந்ததால் 3 பேர் தப்பினர்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே சென்ட்ரிங் பொருட்களை ஏற்றி சென்ற வேன் கட்டுப்பாட்ைட இழந்ததால் சாலையோரத்திலிருந்த 70 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. இதில் நீச்சல் தெரிந்ததால் மூன்று பேர்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பள்ளிப்பட்டிலிருந்து  நேற்று அதிகாலை ராணிப்பேட்டை  மாவட்டம் பொன்னை பகுதிக்கு சென்ட்ரிங் பொருட்களை ஏற்றிக் கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. வேனை  டிரைவர் நேரு(30) ஓட்டினார். இதில், தொழிலாளர்கள்  தீனா(20) மற்றும் சதீஷ்(26) ஆகியோரும் சென்றனர்.

இந்நிலையில், பள்ளிப்பட்டு - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை ராஜா நகரம் ஏரிக்கரை பகுதியில் வேன் சென்றபோது திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த 70 அடி ஆழ பாழடைந்த கிணற்றில் விழுந்தது. இந்த  விபத்தில், டிரைவர் உட்பட 3 பேரும் வேனுடன் கிணற்றில் விழுந்ததில் மூழ்கினர்.

இருப்பினும், இவர்கள் மூவருக்கும் நீச்சல் தெரிந்ததால், அதிர்ஷ்டவசமாக வேனின்  கண்ணாடியை  உடைத்து கொண்டு  நீச்சல் அடித்து காயத்துடன்  வெளியே வந்தனர்.  அவர்கள் விழுந்ததில் ஏற்பட்ட  அலறல் சத்தத்தை கேட்டு, அங்கிருந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் கூடினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, அவர்களை முதலுதவி சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து  வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக  அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்த ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: