உடற்பயிற்சி கூடத்துக்கு சீல்: ஆர்டிஓ அதிரடி நடவடிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெகன் (35). அதே பகுதியில் உடற்பயிற்சி கூடம் வைத்துள்ளார்.  இங்கு 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மேலும் கோயில், காய்கறி மற்றும் மீன் மார்க்கெட் உள்ளன. உடற்பயிற்சி கூடத்துக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர்களது வாகனங்களை, உடற்பயிற்சி கூடத்துக்கு எதிரிலும், அருகிலும் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக மார்க்கெட் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதியடைகின்றனர். மேலும், அரைகுறை ஆடைகளுடன் உடற்பயிற்சி கூடத்துக்கு வருபவர்கள், இரவு 12 மணிவரை சாலையில் அமர்ந்து கொண்டு, அதிக சத்தத்துடன் ஸ்பீக்கர் பாக்ஸ் வைத்து பாடல்களை போட்டு, சாலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது உள்பட பல்வேறு இடையூறுகளை செய்கிறார்கள்.

இதுகுறித்து, செங்கல்பட்டு டவுன் காவல்நிலையம், ஆர்டிஓ, கலெக்டர், எஸ்பி அலுவலகங்கள் வரை புகார் அளிக்கப்பட்டது. மேலும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவிலும் புகார் அனுப்பப்பட்டது. இந்நிலையில், மேற்கண்ட பகுதிக்கு செங்கல்பட்டு ஆர்டிஓ சஞ்ஜீவனா நேற்று சென்று ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக உடற்பயிற்சி கூடம் இயங்குவது தெரிந்தது. இதையடுத்து அவர், போலீசார் உதவியுடன், உடற்பயிற்சி கூடத்துக்கு சீல் வைத்தார்.

Related Stories: