பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: தமிழக முதல்வரின் அறிவுரையின் பேரில்,  மாநகர் போக்குவரத்துக் கழக, அடையார் பணிமனையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆய்வு செய்து, அடையார் மற்றும் திருவான்மியூர் பணிமனைகளில் பணிபுரியும் பணியாளர்களில், கடந்த 3 மாதங்களில் அதிக நாட்கள் பணிக்கு வராத, அதிக நாட்கள் விடுப்பு எடுத்த பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

இதில், போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசியதாவது:  போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளிடமும் கனிவாகநடந்து கொண்டு, எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வண்ணம் பணியாற்றிட வேண்டும். போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. அவை ஊதிய ஒப்பந்தத்தில் இறுதி செய்யப்படும்.

சாதாரணமாக நீண்ட நாட்கள் பணிக்கு வராத பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை தான் மேற்கொள்ளப்படும்.  ஆனால், நாங்கள் அப்படி இல்லாமல், உங்களை எல்லாம் அழைத்து பேசி, குறைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு, தொழிலாளர்களான உங்கள் மீது கொண்ட அக்கறையே காரணமாகும்.  இந்த அரசும் தொழிலாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட அரசாகும்.

மேலும், நீங்கள் தற்பொழுது அடிக்கடி எடுக்கும் விடுப்பானது ஓய்வு பெறும் காலத்தில் உங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆகவே, இனிவரும் காலங்களில் நீங்கள் அனைவரும் முழுமையாக பணிக்கு வந்து, அனைத்துப் பேருந்துகளையும் இயக்கிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: