கருவில் இருப்பது ஆணா, பெண்ணா? வீட்டிலேயே ஸ்கேன் செய்து கருக்கலைப்பு: 3 பெண்கள் உள்பட 7 பேர் அதிரடி கைது

தர்மபுரி: தர்மபுரியில் நவீன ஸ்கேன் கருவியுடன் வீடுகளுக்கே சென்று, கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா? என கண்டறிந்து, கருக்கலைப்பில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கில் கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் ராகவன். இவரது மனைவி வனஜா(27). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், வனஜா மீண்டும் கர்ப்பமடைந்தார். குடும்ப சூழ்நிலை கருதி, பெண்ணாக இருந்தால் கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்தனர். இதனை அறிந்த சிலர் வனஜாவை அணுகினர். தங்களை புரோக்கர்கள் என அறிமுகம் செய்து கொண்டு, கர்ப்பத்தை கலைப்பதில் கைதேர்ந்த ஒருவர், தர்மபுரியில் இருப்பதாக கூறி வனஜாவை அழைத்து வந்து ஒரு ஸ்கேன் சென்டரில் காண்பித்துள்ளனர்.

அங்கு பரிசோதித்ததில், பெண் சிசு என உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த கும்பல், வனஜாவின் கண்களை துணியால் கட்டி அழைத்துச் சென்று, ஒரு வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்துள்ளனர். பின்னர், ஊருக்கு சென்ற வனஜாவுக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். இதில், கருக்கலைப்பின்போது சிசுவின் தலையை மட்டும் வெளியே எடுத்திருப்பதும், பாதி உடம்பு கருப்பையிலேயே இருந்ததும் தெரியவந்தது. உடனே, மருத்துவ குழுவினர் சிசுவின் உடலை அகற்றி, வனஜாவுக்கு கருத்தடையும் செய்தனர்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ அதிகாரிகள் மூலம், தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், கருக்கலைப்பு கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க, குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் விசாரணையை முடுக்கி விட்டனர். இந்நிலையில், நேற்று தர்மபுரி ராஜாபேட்டை ஏரிக்கரை பகுதியில், வெங்கடேசன் என்பவரது வீட்டில், கர்ப்பிணி பெண்கள் 4 பேருக்கு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து கருக்கலைப்புக்கு ஏற்பாடு செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

உடனடியாக ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் (பொ) கனிமொழி, தர்மபுரி டவுன் போலீசார் சென்று குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தியதில், அங்கு கர்ப்பிணி பெண்களுக்கு நவீன ஸ்கேன் பரிசோதனை கருவி மூலம், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறியது தெரியவந்தது. அடுத்தக்கட்டமாக கருக்கலைப்பிற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக திருப்பத்தூர் ராஜமங்கலம், தர்மபுரி, பாப்பாரப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த கார் டிரைவர் சதீஷ்குமார்(37), ஆட்டோ டிரைவர்கள் சுதாகர்(37), குமார்(38), வெங்கடேஷ்(33), நர்ஸ் கற்பகம்(38), ஜோதி (33), சரிதா(40) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து கூறியதாகவும், பெண் சிசு என்பது தெரிய வந்தால், வெளியில் சென்று கருக்கலைப்பு செய்ய ஏற்பாடு செய்து தந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கையில் எடுத்துச் செல்லும் அளவுடைய நவீன ஸ்கேன் கருவியை, ஊர் ஊராக கொண்டு சென்று புரோக்கர் மூலம் ஆள் பிடித்து, வீட்டிலேயே கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து கூறி வந்ததும், குழந்தை பெற விரும்பாதவர்களுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து வந்ததும் தெரியவந்தது.

ஆயிரக்கணக்கான பெண்களுக்கு கருக்கலைப்பு

பிடிபட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், வீடு, வீடாகச் சென்று கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்து, கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டுபிடித்து கூறியுள்ளனர். கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது உறுதியானால், அந்த பெண்களை அங்கீகாரமற்ற தனிநபர்களிடம் அழைத்துச் சென்று, எந்தவித பாதுகாப்பும் இல்லாத முறையில், வீடுகளில் வைத்து கருக்கலைப்பு செய்துள்ளனர்.

இவ்வாறு, ஆயிரக்கணக்கான கர்ப்பிணி பெண்களுக்கு பாலினம் கண்டறிந்து கூறியதுடன், சட்டவிரோதமாக கருக்கலைப்பும் செய்துள்ளனர். எனவே, இவர்களுக்கு பின்னால் பெரிய கும்பல் இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

ஏற்கனவே, திருப்பத்தூரில் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டதாக சுகுமார், வேடியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் தான், தற்போது தர்மபுரியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான கருக்கலைப்பு கும்பலைச் சேர்ந்த 7 பேரில், கற்பகம் மட்டும் நர்சிங் படித்து, தனியார் மருத்துவமனையில் சில ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். மற்ற யாரும் மருத்துவத்துறைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.

Related Stories: