ரஷ்யாவில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு யுரேனியம் எரிகோல்கள் வருகை

நெல்லை: ரஷ்யாவில் இருந்து  கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் வந்தது. நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின்  உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு  வருகிறது. இது தவிர 3, 4வது அணு உலைகள் கட்டுமானப் பணிகளும் நடந்து வருகின்றன.  மேலும் 5, 6வது அணு உலைகளும் அமைக்கப்பட உள்ளன.

இந்நிலையில் கூடங்குளம்  அணுமின் நிலையத்திற்கு மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படும்  செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் ரஷ்யாவின், மாஸ்கோவில் இருந்து  விமானம் மூலம்  மதுரை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தது. அங்கிருந்து  மிகுந்த பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம்  எரிகோல்கள், நேற்று காலை 7.15 மணிக்கு  கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு  கொண்டு வரப்பட்டது.    

ரஷ்ய அரசுத்துறை நிறுவனமான ரோஸட்டம் மூலம் 60 ஆண்டுகள் தொடர்ந்து  கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு சப்ளை செய்யப்படும் என ஒப்பந்தத்தில்  கையெழுத்திடப்பட்டு உள்ளது.கடைசியாக மாஸ்கோவில் இருந்து கடந்த 2018 ஜூன்  29ம் தேதி எரியூட்டப்பட்ட யுரேனியம்  எரிகோல்கள், கூடங்குளம் வந்தது.  இந்நிலையில் தற்போது மாஸ்கோவில் இருந்து  தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு  ரஷ்ய அரசுக்கு சொந்தமான  விமானத்தில் எரிகோல்கள் கொண்டு வரப்பட்டு, மத்திய தொழில்  பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக கூடங்குளம் அணுமின்  நிலையம் வந்தடைந்தது. இவை கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 1, 2 அணு உலைகளில் பொருத்தப்பட உள்ளது.

கூடங்குளம் அணு உலையில் 2 அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி நடந்து வரும் நிலையில் ஒவ்வொரு அணு உலையிலும் 163 எரிகோல்கள்  பயன்படுத்தப்படுகிறது. இந்த எரிகோல்களில் மூன்றில் ஒரு பங்கு எரிகோல்கள்  ஆண்டுக்கு ஒரு முறை எரிபொருள் நிரப்பும் பணியின் போது மாற்றப்பட்டு  வருகிறது.

Related Stories: