கொலை நகரமாக புதுச்சேரி மாறிவிட்டது: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி:

புதுச்சேரி அரசு மின் விநியோகத்தை தனியார் மயமாக்க ஒப்புதல் அளித்துள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தெளிவாக இருக்கிறது.

புதுச்சேரியில் கொலை, கொள்ளை, நிலம், வீடு அபகரிப்பு சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். எப்போதெல்லாம் முதல்வராக ரங்கசாமி வருகிறோரா, அப்போதெல்லாம் புதுச்சேரி கொலை நகரமாக மாறிவிடும். மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அரியாங்குப்பம், திருக்கனூர், காமராஜர் நகர், கவிக்குயில் மற்றும் நகரப்பகுதியில் கஞ்சா சரளமாக விற்கப்படுகிறது.

வெளிநாட்டினர் கோகைன் கொண்டு வந்து விற்கிறார்கள். காவல்துறை ஒத்துழைப்போடு இது நடக்கிறது. முதல்வர் பதவியில் இருந்து ரங்கசாமி விலகினால்தான் புதுச்சேரி மக்களுக்கு பாதுகாப்பு இருக்கும். இல்லையென்றால் தொடர்ந்து கொலைகள் நடந்து கொண்டிருக்கும். அவரால் காவல்துறையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய நிதியை பெற்று தர இவர்களுக்கு தெம்பு, திராணி இல்லை. பாஜகவின் கை பொம்மையாக ரங்கசாமி செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: