முடியாததை முடித்து காட்டுவதில் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான்: அமைச்சர் துரைமுருகன் புகழாரம்

சென்னை: முடியாததை முடித்து காட்டுவதில் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான் என்று அமைச்சர் துரைமுருகன் புகழாரம் சூட்டினார். சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கலைஞர் சிலை திறப்பு விழாவில் திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வரவேற்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

கலைஞர் சிலை அமைந்துள்ள இந்த இடம் ஒரு காலத்தில் சாதாரண இடமாக காட்சி அளித்தது. அதை தமிழக அரசின் தலைமை செயலகமாக, சட்டப்பேரவை நடக்கிற இடமாக மாற்றி ஒரு மகத்தான கட்டிடத்தை எழுப்பியவர் கலைஞர். ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் அந்த இடத்துக்கு வந்து ஒவ்வொரு செங்கலையும் பார்த்து, பார்த்து அடுக்கிவிட்டு கட்டிடத்தை எழுப்பியவர்.

அப்போது, நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தேன். கட்டுகிற வேலை எனக்கு இருந்தாலும், யோசனை சொல்லி அதை அழகுப்படுத்தியவர் கலைஞர் தான். அவர் கனவு நினைவாகி வந்த நேரத்தில் அதை மீண்டும் ஒரு மாயைக்கு கொண்டு போய் விட்டார்கள். ஆனாலும் முடியாததை முடித்து காட்டுவதில் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான். அதே போன்றுதான் நமது முதல்வர் மு.க.ஸ்டாலினும் செயல்படுகிறார்.

இந்த இடத்தில்தான் கலைஞர் கருணாநிதியின் சிலை திறக்க வேண்டும் என்று முதல்வர் சொன்ன போது, ‘அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கிறாரே...’ என்று அசந்தே விட்டேன். இந்த சிலையை இங்கு வைத்தால் எப்படிப்பட்ட பேச்சு எல்லாம் வரும் என்பதை நினைத்து இந்த இடத்தை தேர்வு செய்திருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினை விட நாங்கள் மூத்தவர்களாக இருக்கலாம். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவு, திறமைக்கு முன்னால் நாங்கள் இளையவர்கள்.

நீங்கள் பெரியவர். கலைஞர் சிலையை திறந்து வைத்திருப்பதன் மூலம் இந்த சிலை இருக்கிற வரையில், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவின் பெயர் இந்த அண்ணா சாலையில் இருக்கும். எங்கள் தலைவரை கைது செய்த போது, எங்கள் அறிவகத்துக்கு வந்தவர் வெங்கய்யா நாயுடு. நீங்கள் பட்ட பாட்டை நான் நேரில் இருந்து பார்த்தவன். அப்போது இவர் ஒன்றிய அமைச்சராக இருந்தார். வாஜ்பாய்க்கு போன் போட்டு துடித்தார். அந்த துடிப்புதான் இன்றைக்கு கலைஞர் கருணாநிதி சிலையை திறப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பாக கிடைத்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: