தனியார் பள்ளி மாணவர்களைவிட அரசு பள்ளியின் 3, 5ம் வகுப்பு மாணவர்கள் சிறந்த கற்றல் தேர்ச்சி: தேசிய சாதனை ஆய்வில் தகவல்

சென்னை: அரசுப்பள்ளிகளில் 3 மற்றும் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களை விட சிறந்த கற்றல் தேர்ச்சி பெற்றுள்ளது 2021 தேசிய சாதனை ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 22 மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் மற்றும் ஒன்றிய  அரசு பள்ளிகள் உள்பட 4,145 பள்ளிகளைச் சேர்ந்த 1.26 லட்சத்திற்கும்  அதிகமான மாணவர்கள் 2021  தேசிய சாதனை ஆய்வில் பங்கேற்றனர்.

3ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் தேசிய சராசரிக்கு இணையாக மொழி பாடத்திட்டத்தில் 63% சரியான விடைகளை ஆய்வில் அளித்தனர். அதேசமயம் தனியார் பள்ளி  மாணவர்கள் 54% சரியான பதிலளித்தனர். கணிதத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 55%  என்ற விகிதத்தில்,  தனியார் பள்ளி மாணவர்களை காட்டிலும் (53%) சற்று  சிறந்து விளங்கினர். ஐந்தாம் வகுப்பில், தனியார் பள்ளி மாணவர்களின் 9%  விகிதத்துடன் ஒப்பிடுகையில், 25% என்ற விகிதத்தில் அரசுப் பள்ளிக்  குழந்தைகள் கணிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

8ம் வகுப்பில், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 53% மாணவர்கள் மொழி  பாடத்தில் சரியான விடைகளை அளித்தனர். அரசுப் பள்ளிகளில் 38% பேர் சரியான  விடைகளை அளித்தனர். பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் பெரிய வித்தியாசம்  இருந்தது. தனியார் பள்ளிகளில் இருந்து 51% பேர் சரியான விடைகளை அளித்த போது அரசுப் பள்ளிகளில் 35% பேர் தான் சரியான விடைகளை அளித்தனர். இதுகுறித்து கல்வியாளர்கள் கூறும்போது, ‘‘தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 3 மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களை விட சிறந்த கற்றல் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று 2021  தேசிய சாதனை ஆய்வு காட்டுகிறது.

இருப்பினும், டிஜிட்டல் கற்றல் மற்றும் பெற்றோர்களின் ஆதரவு காரணமாக தனியார் பள்ளிகளில் 8 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும்  மாணவர்கள் சிறப்பான கற்றல் முடிவுகளை பெற்றுள்ளனர். 8 மற்றும் 10ம் வகுப்புகளில், டிஜிட்டல் கருவிகள் பயன்பாடு மற்றும் ஊரடங்கு காலத்தில் தொடர் ஆன்லைன் வகுப்புகள் கிடைக்காததால் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளது.

Related Stories: