பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றும் நடைமுறை எளிமையாக்கம்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: பேரவையில் கடந்த மே 7ம் தேதி நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘‘தற்போது அரசு பணியில் நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்வதில் அதிக காலதாமதமாகும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்பது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நடைமுறையில் உள்ள செயல்முறைகளை எளிமைப்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் கணவன் அல்லது மனைவியின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். அதனால் குடும்ப ஓய்வூதியம் பெறும் நேரங்களில் கணவன் அல்லது மனைவியின் இறப்பு சான்றிதழ் மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது’’ என கூறினார்.

அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்யும் நடைமுறையை தமிழக அரசு எளிமையாக மாற்றியுள்ளது. குடும்ப ஓய்வூதியமாக மாற்ற கணவன்-மனைவி இறப்பு சான்றிதழை மட்டுமே சமர்ப்பித்தால் போதுமானது.

Related Stories: