5,529 பதவிக்கு 9.95 லட்சம் பேர் எழுதிய குரூப் 2, 2ஏ தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை, மே 29: 5,529 பதவிகளுக்கு 9.95 லட்சம் பேர் எழுதிய குரூப் 2, 2ஏ தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவி (நேர்முக தேர்வு பதவி) 116 இடங்கள், குரூப் 2ஏ (நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த சனிக்கிழமை நடந்தது.

தேர்வை 9 லட்சத்து 94 ஆயிரத்து 878 பேர் மட்டுமே எழுதினர். 1 லட்சத்து 83 ஆயிரத்து 285 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்நிலையில் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் கூறியிருப்பதாவது: குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான வினாத்தாள்களுடன் கூடிய உத்தேச விடைகள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய விண்ணப்பதாரர், அவரவர் எழுதிய கொள்குறி வகைத் தேர்வின் விடைகளை தேர்வாணைய இணைய தளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார காலத்திற்குள், அதாவது வருகிற 3ம் தேதி மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம். விண்ணப்பதாரர் தேர்வு நுழைவுச் சீட்டின் நகல், பதிவெண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு www.tnpsc.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே தங்களுடைய ஆட்சேபனைகளை அனுப்பலாம்.

Related Stories: