கவுரவ தலைவரானார் ஜி.கே.மணி பாமக புதிய தலைவராக அன்புமணி தேர்வு

சென்னை: திருவேற்காட்டில் நேற்று நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாமக தலைவராக அன்புமணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஜி.கே.மணி கவுரவ தலைவரானார். அவர்களுக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். பாமக தலைவர் பதவியில் ஜி.கே.மணி 25 ஆண்டுகள் பதவி வகித்து வந்த நிலையில், அவருக்கு பாராட்டு விழா சென்னையில் ராமதாஸ் தலைமையில் நடத்தப்பட்டது. அப்போதே அறிவிப்பு வெளியாகும் என்றும் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டது. ஆனால் அன்றைய தினம் ஜி.கே.மணி, பாமக சிறப்பு பொதுக்குழுக்கூட்டம் 28ம்தேதி கூட்டப்படும் என்ற அறிவிப்பை மட்டும் வெளியிட்டார்.

 அதன்படி, சென்னையை அடுத்த திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ் திருமண அரங்கத்தில் நேற்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

  பொதுக்குழுக் கூட்டம் தொடங்கிய உடன் ஜி.கே. மணி சிறப்பு தீர்மானம் ஒன்றை வாசித்தார். அவர் பேசுகையில்,‘‘ தமிழக அரசியலில் பாமக தவிர்க்க முடியாத கட்சியாக உள்ளது. பாமக தலைவராக 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி வந்த நிலையில், அந்த பொறுப்பை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையில் புதிய தலைவராக அன்புமணி பொதுக்குழு உறுப்பினர்களின் ஒருமித்த ஒப்புதலுடன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்’’ என்றார்.

 இதையடுத்து தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மண்டபத்துக்கு வெளியே தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் பாமக நிறுவனரும், தனது தந்தையுமான ராமதாசின் கால்களில் விழுந்து வணங்கினார். அவர் அன்புமணியை, கட்டியணைத்து கண்ணீர் மல்க வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது தந்தை மகன் என இருவருமே கண்களில் நீர்மல்க நின்றனர். தொடர்ந்து தனது தந்தைக்கு அன்புமணி சால்வை அணிவித்தார்.

 கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: பாமகவின் கவுரவ தலைவராக ஜி.கே.மணி செயல்படுவார். தற்போது மூன்றாவதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணியை கோட்டையில் அமர வைக்க இங்கே ஒரு குடும்பமாக நாம் வந்துள்ளோம். கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் 100 வாக்குகள் என்னால் வாங்க முடியும் என்று உழைக்க வேண்டும். அன்புமணியை முதல்வர் ஆக்குபவன் தான் உண்மையான தொண்டன்.

சில காக்கைகள் வரும் போகும். ஆனால் உழைப்பவரை உடன் வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு இனி காக்கைகள் வேண்டாம். நம்முடைய பலம் 4 லிருந்து 40 ஆக ஏன் மாறவில்லை. இது யார் குற்றம். அதே குற்றத்தை மீண்டும் செய்யப்போகிறீர்களா. திமுக கட்டுப்பாடு உள்ள கட்சி. அதே போல பல கட்சிகள் உள்ளன. இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி பாமக. இவ்வாறு அவர் பேசினார்.  

அன்புமணி ராமதாஸ் பேசுகையில்.‘‘கட்சித் தலைவர் என்பது மிகப்பெரிய பொறுப்பு. அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுவேன். ஒரு தலைவனாக இல்லாமல் தொண்டனாக சிறப்பாக செயலாற்றுவேன். விரைவில் சென்னையில் கட்சிக்கு அலுவலகம் திறக்கப்படும். தமிழகத்தை முன்னேற்றுவதே எனது இலக்கு. நான் ஆட்சிக்கு வந்ததும் போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு குறித்து தான் இருக்கும்’’ என்றார்.

முதல்வர் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது: பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணிக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். சமூகநீதி பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: