சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞரின் முழு உருவச் சிலை திறப்பு: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார்

சென்னை: தமிழக அரசின் சார்பில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் 16 அடி உயர திருவுருவ சிலையை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நேற்று திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த பிரமாண்ட விழாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் முதல்வராக 5 முறை பணியாற்றியவர் கலைஞர். அனல் பறக்கும் வசனங்களால் திரையுலகில் தனித்துவம் பெற்றவர். இந்திய திருநாட்டிற்கே பல முன்னோடி திட்டங்களை தந்திட்டவர். “உடன்பிறப்பே” எனும் தன் காந்தக் குரலால், திமுகவினரை கட்டிப்போட்டவர். நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட உத்தம தலைவர்களை போற்றி திருவுருவ சிலைகளும், அழகிய மணிமண்டபங்களும் அமைத்திட்டவர், ஏழை எளியோர் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற திட்டங்களை தந்தவர். கதை, கவிதை, நாடகம் என தான் தொட்ட அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர். அரசியலிலும், ஆட்சியின் ஆளுமையிலும் தன்னிகரற்ற தனி பெருந்தலைவராக வலம் வந்தவர் கலைஞர். இளம் வயது தொடங்கி, இறப்பிலும் போராடி வெற்றி கண்டவர். பகுத்தறிவு பகலவன் குருகுலத்தில் பயின்றவர்.

அண்ணாவால், “என் தம்பி” என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்டவர். பேராசிரியர் அன்பழகனால், பன்முகத்தன்மை கொண்ட தலைவர் என்றும் பாராட்டப்பட்டவர். உலகத் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருப்பவர். கலைஞரை சிறப்பித்து போற்றிடும் வகையில் கலைஞர் பிறந்த ஜூன் 3ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும்  சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும்’  என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.1.56 கோடி செலவில், கம்பீரம் மிக்க கலைஞரின் கலைமிகு சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. சென்னை அடுத்த மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் சிற்பி தீனதயாளன் இந்த சிலையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 12 அடி உயர பீடம் அமைக்கப்பட்டு, 16 அடிஉயரத்தில் சிலை நிறுவப்பட்டது. வெண்கலத்தால் ஆன கலைஞர் சிலை 2 டன் எடை கொண்டது. சிலை வைக்கும் இடத்தை சுற்றி சுமார் 5,300 சதுர அடியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதுடன், அழகிய பூங்கா, வண்ண விளக்குகள் உள்ளிட்ட அழகிய வேலைபாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கலைஞரின் திருவுருவ சிலை திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கலைஞரின் சிலையை திறந்து வைத்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார். அனைத்து அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் விழா நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு விழா பேரூரையாற்றினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையுரையாற்றினார். தொடர்ந்துதமிழக அரசின் செய்தித்துறை சார்பில் கலைஞரின் வாழ்க்கை வரலாறு, அவர் ஆற்றிய சாதனைகள், திட்டங்கள் உள்ளிட்டவைகள் இடம் பெற்ற தொகுப்பு காணொலி வெளியிடப்பட்டது.

விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.துரைசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மதிமுக பொது செயலாளர் வைகோ, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக பொது செயலாளர் ஈஸ்வரன், தவாக தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள், சபாநாயகர் அப்பாவு, கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, மா.சுப்பிரணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ. அன்பரசன் உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட அனைத்து எம்பிக்கள், உதயநிதி ஸ்டாலின், மாதவரம் சுதர்சனம், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்கள்,  சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா உள்ளிட்ட அனைத்து மாவட்ட திமுக செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அது மட்டுமல்லாமல்  நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், நாசர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரை உலக பிரபலங்கள், கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், செல்வி செல்வம், முரசொலி செல்வம், மு.க.தமிழரசு என கலைஞர் குடும்பத்தினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நிறைவாக தலைமை செயலாளர் இறையன்பு நன்றி கூறினார்.

கலைஞரின் ஐந்து கட்டளை

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலை அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் ஐந்து கட்டளைகள் இடம் பெற்றுள்ளது. அதாவது அண்ணா வழியில் அயராது உழைப்போம்! ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்! இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்! வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்! மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி! என்ற வாசகம் அதில் இடம் பெற்றுள்ளது. சிலை திறப்பைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் சிலை முன்பு நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.

Related Stories: