அடுக்குமாடி குடியிருப்பில் தீ; வயதான தம்பதி உயிர் தப்பினர்; திருவான்மியூரில் பரபரப்பு

துரைப்பாக்கம்: திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வயதான தம்பதியினர் உயிர் தப்பினர். சென்னை திருவான்மியூர், கலாஷேத்ரா அவென்யூ, 2வது தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் 4வது தளத்தில் சலீம் பாஷா (68), ஷகிரா (56) தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்றிரவு வழக்கம் போல சாப்பிட்டு ஓய்வு எடுத்து கொண்டிருந்தனர். அப்போது, படுக்கை அறையில் உள்ள ஜன்னல் திரையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிய ஆரம்பித்தது.

இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த தம்பதியர், அதிர்ச்சியடைந்து கீழே இறங்கினர். தீ எரிவதை பார்த்ததும் மற்ற தளங்களில் இருந்தவர்களும் அலறியடித்து வெளியே ஓடினர். உடனே திருவான்மியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வீடு முழுவதும் மரத்தாலான பொருட்களால் செய்யப்பட்டிருந்ததால் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

அதனால் வேளச்சேரி, அசோக்நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஸ்கை லிப்ட் வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. தகவலறிந்து திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்து தெரியவந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: