புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனைகளை ஒதுக்க எதிர்ப்பு அரசு பேருந்தை சிறைபிடித்து திடீர் சாலை மறியல்-வாணியம்பாடி அருகே பரபரப்பு

திருப்பத்தூர் : புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனைகள் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து வாணியம்பாடி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் ஏரிக்கரை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை பொதுப்பணித்துறையினர் கடந்த மாதம் அகற்றினர். மேலும், இதேபோல் தும்பேரி கூட்டு சாலையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடு மற்றும் கடைகள் உள்ளிட்ட 37 கட்டிடங்களை நெடுஞ்சாலை துறையினர் நேற்று முன்தினம் அப்புறப்படுத்தினர்.

இதன் காரணமாக, இந்த இரண்டு பகுதிகளிலும் வீடு கட்டி வாழ்ந்து வந்த ஏழை மக்களுக்கு மாற்று இடம் கொடுப்பதற்காக வருவாய் துறை மூலம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனைகளை ஒதுக்கி தருவதற்காக அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.  இதுகுறித்து அறிந்த மதனாஞ்சேரி கிராமமக்கள் தங்கள் பகுதியில் உள்ள இடத்தை மாற்று ஊராட்சி நபர்களுக்கு கொடுக்க கூடாது என்றும், தங்கள் பகுதியில் உள்ள மக்கள் பட்டா கேட்டு காத்திருக்கும் நிலையில் பிற ஊராட்சி மக்களுக்கு தங்கள் பகுதியில் பட்டா வழங்க கூடாது என வலியுறுத்தியும் மதனாஞ்சேரி கூட்டு சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் மற்றும் தாலுகா போலீசார், விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: