கரூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை-மக்கள் மகிழ்ச்சி

கரூர் : கரூர் மாவட்டத்தில் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ததால் மக்கள் சந்தோஷமடைந்துள்ளனர்,

கடந்த ஒரு வாரமாக சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வதக்கி வருகிறது. தினமும் 100 டிகிரியை தாண்டியும் வெயில் வாட்டி வருகிறது. இந்த வெயில் காரணமாக பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மாவட்டம் முழுதும் சிறிது நேரம் மட்டுமே லேசான அளவில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் வானம் இருட்டிக் கொண்டு திடீரென இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் மாவட்டம் முழுதும் பரவலாக மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின்நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. மேலும், ராயனூர் பகுதியில் மின்கம்பம் சரிந்து விழும் நிலைக்கு சென்றதால் இந்த பகுதியில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று சரி செய்து, உடனடியாக மின்சாரம் வழங்கும் பணியை மேற்கொண்டனர்.

மேலும், ஒரு மணிநேரம் பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான நிலை நிலவியதால் அனைத்து தரப்பினர்களும் சந்தோஷமடைந்தனர்.

Related Stories: