மோகனூர் வட்டாரத்தில் தர்ப்பூசணி கிலோ ₹1க்கு விற்பனை-அறுவடையை நிறுத்திய விவசாயிகள்

மோகனூர் : வெளிமாநிலம், மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால், மோகனூர் வட்டாரத்தில் விளைவிக்கப்பட்ட தர்ப்பூசணி பழங்களை கிலோ ₹1க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் வேதனையடைந்த விவசாயிகள், தர்ப்பூசணியை அறுவடை செய்யாமல் விளைநிலத்தில் விட்டுள்ளனர்.நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டாரத்திற்குட்பட்ட ராசிபாளையம், நெய்காரன்பட்டி, மூங்கில்பட்டி, மூணாங்கல்பட்டி, கங்கநாயக்கன்பட்டி, குமரிபாளையம், கொட்டுரங்கன்பட்டி, பரளி உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் தர்ப்பூசணி பயிரிடப்பட்டுள்ளனர்.

கோடை காலத்தில் விற்பனையை எதிர்நோக்கி இங்குள்ள விவசாயிகள்  தர்ப்பூசணியை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் தர்ப்பூசணியை பெங்களூரு, கேரளா, மும்பை, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வெளிமாநில, மாவட்ட வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் தர்ப்பூசணியை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோடை காலத்தில் தர்ப்பூசணிக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்க, வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வருவதால் தர்ப்பூசணி விற்பனை கடும் சரிவடைந்துள்ளது.

இதன் எதிரொலியாக மோகனூர் வட்டாரத்தில் விளைவிக்கப்பட்ட தர்ப்பூசணி பழங்களை, வியாபாரிகள் கிலோ ₹1க்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து ராசிபாளையத்தில் தர்பூசணி பயிரிட்டுள்ள விவசாயி கந்தசாமி கூறுகையில், ‘சுமார் 1.5 ஏக்கரில் தர்ப்பூசணி சாகுபடி செய்துள்ளேன். கடந்தாண்டு கோடை சீசனின்போது தர்ப்பூசணி கிலோ ₹30 முதல் ₹40 வரை விற்பனையானது. ஆனால், தற்போது தர்ப்பூசணியை மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள், வெளி மாநிலங்களில் ெதாடர் மழை பெய்து வருவதை காரணமாக கூறி, கிலோ ₹1க்கு கேட்கின்றனர். இது ஆள் கூலிக்கு கூட கட்டுப்படி ஆகாது என்பதால், விளைந்த தர்ப்பூசணி பழங்களை பறிக்காமல், விளை நிலத்திலேயே விட்டுள்ளதால் அழுகி வருகின்றன. இதனால், முதலீடு செய்த பணம் கூட கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்’ என்றார்.

Related Stories: