கிருமாம்பாக்கத்தில் ஆலங்கட்டி மழை காற்றுடன் கனமழையால் நெற்பயிர், வாழைகள் சேதம்

பாகூர் : புதுச்சேரியில் நேற்று முன்தினம் மாலை கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசிய நிலையில் இரவு 7 மணிக்கு பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இடியுடன் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. மின்சாரம் தடைபட்டதால் கிராமங்கள் இருளில் மூழ்கின. பாகூர் பங்களா வீதியில் இடி விழுந்ததில் 2 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அப்போது, தீயணைப்பு வீரர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அதேபோல், கிருமாம்பாக்கம் பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த மழையின் இடையே ஆலங்கட்டி மழையும் பெய்தது. சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் கன்னியக்கோவில், குருவிநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நெல்வயல்களில் தண்ணீர் தேங்கி, கதிர்கள் சாய்ந்தன. ஏராளமான வாழைகளும் சேதமடைந்தன. பலத்த மழையால் முள்ளோடை வாரச்சந்தையில் காய்கறி வாங்க சென்ற பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Related Stories: