பாலக்கோடு அருகே வனப்பகுதியில் மாங்காய் அறுவடை செய்ய மரத்திற்கு ₹20 நிர்ணயம்-பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தர்மபுரி : பாலக்கோடு அருகே வனப்பகுதியில் மாங்காய் அறுவடை செய்ய ஒரு மரத்திற்கு ₹20 நிர்ணயம் செய்யப்பட்டு, மாவட்ட வன அலுவலர், பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஜிட்டான்டஅள்ளி, மகேந்திரமங்கலம், அண்ணாமலை அள்ளி, பிக்கனஅள்ளி உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமங்களை சுற்றி உள்ள வனப்பகுதியில் கிராம மக்கள் மாங்கன்று வைத்து பராமரித்து வருகின்றனர். 2 தலைமுறையாக இந்த மரங்களில் இருந்து மாங்காய் அறுவடை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மா மரங்கள் உள்ள பகுதி வனத்துறைக்கு சொந்தமான இடம் எனக்கூறி ஆக்கிரமிப்பு நபர்களிடம் இருந்து வனத்துறை மாமரங்களை கைப்பற்றியது. பின்னர் மாமரங்களை வனத்துறையினர் ஏலம் விட்டனர். ஏலம் எடுத்த நபருடன் நேற்று முன்தினம் சென்ற வனத்துறையினர் கொத்தாலம் வனப்பகுதியில் உள்ள மரங்களில் மாங்கய் அறுவடை செய்தனர். இத்தகவல் கிடைத்து அங்கு திரண்ட பொதுமக்கள், நாங்கள் வைத்து வளர்த்த மாமரத்தில் வெளிநபர்கள் மாங்காய் அறுவடை செய்யவிட மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாங்காய் அறுவடை நிறுத்தப்பட்டது. வனத்துறை மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், அரசு நிர்ணயித்த தொகையை செலுத்திவிட்டு, மரங்கள் வைத்த நபர்களே மாங்காய் அறுவடை செய்துக்கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஏலம் எடுத்தவர் அறுவடை செய்த மாங்காய்களை அங்கயே கொட்டிவிட்டு திரும்பினார். இந்நிலையில் ஜிட்டாண்டஅள்ளி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சிவாஜி தலைமையில் ஊர் பிரமுகர் முருகேசன் உள்ளிட்ட 6 ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தர்மபுரி மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர்.

அங்கு மாவட்ட வன அலுவலர் கேவி அப்பலநாயுடுவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வனத்துறை சட்டத்தின்படி ஒரு மரத்திற்கு ₹20 செலுத்தி மாங்காய் அறுவடை செய்து கொள்ளலாம். அறுவடைக்கு செல்லும்போது வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டு ஊர் திரும்பினர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கேவி அப்பலநாயுடு கூறுகையில், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மா மரங்கள் வைத்து பராமரித்து வருகின்றனர். பொதுமக்களே பயனடைய வேண்டும் என்பதற்காக அரசின் மிக குறைந்த நிர்ணயத்தொகையாக ஒரு மரத்திற்கு ₹20 செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. அவர்களும் ஏற்றுக்கொண்டனர். வெளிநபர்களுக்கு ஏலம் விடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: