ஊட்டியில் தொடரும் கனமழை நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

ஊட்டி :  நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கடும் குளிர் நிலவி வருகிறது. நேற்றும் 2வது நாளாக இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. மழை காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ள சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் என்பதால் மண்சரிவு மற்றும் மரம் விழுதல் உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட கூடிய அபாயம் நீடிக்கிறது. இதனிடையே நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி ஊட்டி 20.5, நடுவட்டம் 5, கிளன்மார்கன் 11, மசினகுடி 23, அவலாஞ்சி 4, அப்பர்பவானி 5, குன்னூர் 6, கேத்தி 48, கோடநாடு 25 என மொத்தம் 215.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.

ஊட்டியில் நேற்று மாலை 4 மணியளவில் கனமழை பெய்த  துவங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் பெய்த மழையால் தாவரவியல்  பூங்கா சாலையில் பழங்குடியினர் பண்பாட்டு மைய பகுதியில் மழைநீர் மற்றும்  கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும்  அவதிக்குள்ளாகினர்.

மேலும் பூங்கா சாலையில் உள்ள ஜான் சலிவன் சிலை அருகே  சாலையில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து சாலையில் வழிந்தோடியது. இதனால்,  கடும் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் கடும்  பாதிப்படைந்தனர். இதேபோல், ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகம், சேரிங்கிராஸ், கூட்ெஷட் பகுதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது.

Related Stories: