ஓவேலியில் டீ கடைக்காரரை தாக்கி கொன்ற காட்டு யானையை பிடிக்க கும்கிகளுடன் களமிறங்கிய வனத்துறை

கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரூற்றுபாறை பகுதியில் நேற்று முன்தினம் காட்டு யானை தாக்கி டீ கடை உரிமையாளர் ஆனந்த் என்பவர் உயிரிழந்தார். இந்த காட்டு யானையை பிடித்து அங்கிருந்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார். இதனைத் தொடர்ந்து காட்டு யானையை கண்காணித்து பிடிப்பதற்காக முதுமலையில் இருந்து விஜய் மற்றும் சீனிவாசன் ஆகிய 2 யானைகள் நேற்று இரவு ஆருற்றுபாறை பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று காலை 10 மணியளவில் இந்த யானைகளை கொண்டு காட்டு யானையின் இருப்பிடத்தை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து ட்ரோன் கேமரா மூலமும் யானையின் இருப்பிடம் தேடி கண்டு பிடிக்கப்பட்டது.காட்டு யானை கிளன்வன்ஸ் தனியார் தோட்ட பகுதியில் முகாமிட்டு இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், கும்கி யானைகளை அந்த பகுதிக்கு இடமாற்றி தற்போது யானைகள் அங்கு முகாமிட்டு காட்டு யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தற்போது, அங்குள்ள பெண் யானை மற்றும் ஒரு குட்டி யானையுடன் இந்த யானை சேர்ந்து இருப்பதால் இந்த யானையை தனியாக பிரித்து பாதுகாப்பான பகுதிக்கு விரட்டிச் செல்ல முடியும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை தற்போது வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.  யானையைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளில் உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன் தலைமையில் வனச்சரகர் கணேசன் மற்றும் ஏராளமான வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், யானைப் பாகன்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவைப்படும் பட்சத்தில் முதுமலையில் இருந்து மேலும் கும்கி யானைகள் வரவழைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: