குத்தாலம் அருகே இடிந்து விழும் ஆபத்தான மேல்நிலை குடிநீர் தொட்டி

*உடனே அகற்ற வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

குத்தாலம் : குத்தாலம் அருகே இடிந்து விழும் ஆபத்தான மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அஷ்டமி பைரவர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் வளாகத்தில் உள்ளே மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது.

தற்போது குடிநீர் தொட்டி சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்தும், கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. இக்கோயிலுக்கு அஷ்டமி அன்று சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் திரளாக வந்து செல்வார்கள். இந்நிலையில் எந்த நேரத்திலும் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது.எனவே சேத்திரபாலபுரம் கிராமத்தின் பிரதான குடிநீர் ஆதாரமாக இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்து வருகிறது. இங்கு 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இல்லையென்றால் இப்பகுதியிலுள்ள அன்றாட கூலி வேலைக்கும் செல்வோரும், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் தண்ணீர் இல்லாமல் பெரிதும் தவிக்கும் சூழ்நிலை ஏற்படும் நிலை உள்ளது.எனவே அரசு விரைவில் நடவடிக்கை எடுத்து சேதமடைந்து நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித் தரவேண்டும் என இப்பகுதியில் உள்ள மக்களும், கோயில்களுக்கு வரும் பக்தர்களும் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: