3 நதிகள் ஒன்று கூடும் சிங்கிரிப்பள்ளியில் புதிய அணை கட்டவேண்டும்-குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி :  மார்கண்டேயன் நதி, தடதாரை ஆறு மற்றும் நாச்சிக்குப்பம் ஆறு இணையும் சிங்கிரிப்பள்ளியில் புதிய அணை கட்ட வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தொடர்புடைய அலுவலர்கள் விளக்கமளித்தனர். இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை சீற்றங்களால் மா சாகுபடி கடுமயைாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாவிற்கு காப்பீடு செய்ய வழிவகை செய்ய வேண்டும். அரசு சார்பில் மாங்காய் ஊறுகாய் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க வேண்டும். மார்கண்டேயன் நதி, தடதாரை ஆறு மற்றும் நாச்சிக்குப்பம் ஆறு இணையும் சிங்கிரிப்பள்ளியில், புதிதாக அணை கட்டவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இது தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பு, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் வரும் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் மாரசந்திரம் தடுப்பணையில் இருந்து, படேதலாவ் ஏரிக்கு செல்லும் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் மழை பெய்தபோது, ஏரிகளில் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. மேலும், ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதியுறும் நிலை காணப்படுகிறது. கடந்தாண்டு மழை பெய்த போது, அணைக்கு கீழ் உள்ள விளை நிலங்களில் நடவு செய்யப்பட்டிருந்த மல்லிகை தோட்டங்கள் அழிந்துவிட்டது. தற்போது புதிய மல்லிகை தோட்டம் அமைக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மல்லிகை செடிகளை, மானிய விலையில் வழங்க வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

இதற்கு பதிலளித்து கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பேசியதாவது: விவசாயிகளிடம் பெறும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மனுக்கள் பதில் அளிக்கும்போது தெளிவாக உரிய விவரங்களை அளிக்கப்படும். விவசாயிகளுக்கு தரமான நெல் விதைகள் வழங்கப்படும். மா காப்பீடு தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும். தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் சொட்டுநீர் பாசனம் அமைப்புகள், 7 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

சிங்கிரிப்பள்ளி அணை கட்ட 104 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 57 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு சொந்தமானது. இதுகுறித்து ஆய்வு நடத்தி, மதிப்பீடு தயார் செய்யப்படும்’ என்றனர்.

இக்கூட்டத்தில் டிஆர்ஓ., ராஜேஸ்வரி, இணை இயக்குநர்கள் (வேளாண்மை) ராஜேந்திரன், (தோட்டக்கலைத்துறை) பூபதி, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) ராம் பிரசாத், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன், வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ், வேளாண் அலுவலர் அருள்தாஸ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: