குடியாத்தம் அருகே அதிகாலையில் 10 ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தை-கிராம மக்கள் பீதி

குடியாத்தம் : குடியாத்தம் அருகே அதிகாலையில் கிராமத்தில் புகுந்த சிறுத்தை 10 ஆடுகளை கடித்து கொன்றது. சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் வனச்சரகம் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா  வனச்சரகத்துடன் இணைந்துள்ளது. இங்கு சிறுத்தைகள், கரடிகள், யானைகள், மான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்டவைகள் உள்ளன.

இந்த வனச்சரகத்தையொட்டி உள்ள கிராமங்களுக்குள் அவ்வப்போது யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, மான்கள் நுழைவது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்க விவசாயிகள் ஆங்காங்கே வேலிகள் அமைத்து உள்ளனர். மேலும், வனத்துறையினர் ரோந்து செல்லும்போது யானைகள் நுழைந்தால் மேளம் அடித்தும், பட்டாசு வெடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபடுகின்றனர்.

கடந்தாண்டு குடியாத்தம் அடுத்த கலர்பாளையம் கிராமத்திற்குள் சிறுத்தை  ஒன்று நுழைந்தது. மேலும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 3 பேரை சிறுத்தை தாக்கியதில், படுகாயமடைந்தனர். பின்னர், சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியாத்தம் அடுத்த  கல்லப்பாடி கிராமத்தில் பட்டியில் கட்டியிருந்த 10க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகளை சிறுத்தை கடித்து கொன்றது. இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணி அளவில் குடியாத்தம் அடுத்த நாகல் கிராமத்தில் விவசாயி அன்பு(39) என்பவர் தனது பட்டியில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இதிலிருந்த 10 ஆடுகளை சிறுத்தை கடித்து குதறி கொன்றுள்ளது. காலை 7 மணி அளவில் இதைப்பார்த்த விவசாயி அதிர்ச்சி அடைந்தார். பின்னர், பட்டியில் இறந்து கிடந்த ஆடுகளை எடுத்து அவரது விவசாய நிலத்தில் புதைத்துள்ளார்.

இதுகுறித்து அன்பு குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, சிறுத்தை கால் தடயம் ஆங்காங்கே பதிந்து இருந்தது தெரியவந்தது. சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Related Stories: