களக்காடு அருகே சமையல் தொழிலாளியை கொன்றது ஏன்?கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

களக்காடு : களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், யாதவர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகன் (43). முருகன் சமையல் தொழிலாளி. கடந்த உள்ளாட்சி தேர்தலில் இவரது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த முத்தையா என்ற சுரேஷ் சிங்கிகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக முருகன் தேர்தல் பணியில் ஈடுபட்டார். தேர்தலில் முத்தையா என்ற சுரேஷ் வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவரானார். இதனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கிளை செயலாளரான வானமாமலை என்ற சுரேஷ்க்கு முருகன் மீது விரோதம் ஏற்பட்டது. இதையடுத்து வானமாமலை என்ற சுரேஷ், முருகனுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

 இந்நிலையில் கடந்த 22ம் தேதி காலை 8 மணியளவில் வயலுக்கு தனது பைக்கில் சென்ற முருகனை, மர்ம கும்பல் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்தது. இதுபற்றி அவரது மனைவி செல்வி (40) அளித்த புகாரின் பேரில் களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக சிங்கிகுளத்தை சேர்ந்த ஐகோர்ட் ராஜா (34), ராமச்சந்திரன் (43) கீழதேவநல்லூரை சேர்ந்த இசக்கிப்பாண்டி (32), ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் முருகன், முத்தையா என்ற சுரேசுக்கு ஆதரவாக செயல்பட்டதால், வானமாமலை என்ற சுரேஷ் தோல்வி அடைந்தார்.

இந்த விரோதத்தின் காரணமாக முருகனை கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுபோல இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோதைசேரியை சேர்ந்த சுரேஷ் என்ற சொக்கலிங்கம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டிலும், இசக்கிமுத்து (28) அம்பை கோர்ட்டிலும் சரணடைந்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள அதிமுக நிர்வாகி வானமாமலை என்ற சுரேஷ் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: