திருவண்ணாமலையில் அடுத்தடுத்து கைவரிசை 2 வீடுகளின் பூட்டு உடைத்து 22 சவரன், ₹4 லட்சம் திருட்டு-போலீசார் தீவிர விசாரணை

திருவண்ணாமலை :  திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டு உடைத்து 22 சவரன் நகை மற்றும் ₹4 லட்சம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை ஐடெக் நகர் கரையான் செட்டித்தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(34), வியாபாரி. இவரது மனைவி சவுமியா(29). கடந்த 25ம் தேதி ராதாகிருஷ்ணன் வியாபாரம் தொடர்பாக மும்பைக்கு சென்றுவிட்டார். எனவே, அவரது மனைவி, தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், சவுமியா நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அறையின் பூட்டும் உடைந்திருந்தது. அறைக்குள் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. இரும்பு கம்பியால் பீரோவை உடைத்து அதிலிருந்த ₹1.50 லட்சம் மற்றும் 12 சவரன் நகைகள் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.அதேபோல், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரியும் ஜெய்சங்கர்(45) என்பவருடைய வீட்டின் முன் பக்க பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது.

ஜெய்சங்கர் வழக்கம்போல பணிக்கு சென்றிருந்த நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

வீட்டின் பூட்டு உடைத்திருப்பது குறித்து அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்ததும், ெஜய்சங்கர் விரைந்து வந்து பார்த்தார். அப்போது, அவரது வீட்டில் உள்ள பீரோவையும் மர்ம ஆசாமிகள் உடைத்துள்ளனர். ஆனால், அதில் பணம், நகை இல்லை. எனவே, வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் கலைந்து போட்டு அலசி ஆராய்ந்துள்ளனர். வெளியூர் செல்வதால் அரிசி மூட்டையில் மறைத்து வைத்திருந்த 10 சவரன் நகைகள் மற்றும் வீட்டுமனை வாங்குவதற்காக வைத்திருந்த ₹2.50 லட்சம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.

அதேபோல், அதே பகுதியில் உள்ள மேலும் 3 வீடுகளில் பூட்டை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். ஆனால், பூட்டு பாதி உடைந்த நிலையில் திருடும் முயற்சியை கைவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.இந்நிலையில், அடுத்தடுத்த வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் 2 வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

அதில், 2 வீடுகளிலும் பதிவான கைரேகைகள் ஒரே மாதிரி இருந்தது தெரியவந்தது.திருவண்ணாமலை பகுதியில் முகாமிட்டு, பூட்டப்பட்டுள்ள வீடுகளை நோட்டமிட்டு மர்ம கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி வருவது தெரியவந்துள்ளது. எனவே, மர்ம நபர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: