ஆந்திராவில் அதிகாலை நேரத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி..!!

அமராவதி: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முலகலேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜானி பாய். இவர் தனது வீட்டில் அவருடைய மகன், மருமகள் ஷர்புனா, பேரன் பைரோஜ் ஆகியோருடன் வழக்கம்போல் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் சமையலறையில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சுவர் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜைனுபி (60), பாபு (35), ஷர்புனா (30), பைரோஜ் (6) ஆகியோர் உயிரிழந்தனர்.

அருகருகே இருந்த வீடுகளும் இடிந்ததில் 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கல்யாணதுருகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  தகவல் கிடைத்ததும் உடனடியாக போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்துக்கு வேறு எதாவது காரணமாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.  சிலிண்டர் விபத்திற்கான காரணம் பற்றி தற்போது வரை முழுவிவரம் தெரியவில்லை.

Related Stories: