இனியாவது குறையுமா கோடையின் வெப்ப அலைகள்?: தமிழ்நாட்டில் 25 நாட்களாக நீடித்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது..!!

சென்னை: தமிழ்நாட்டில் 25 நாட்களாக நீடித்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது. தமிழகத்தில் மே மாத தொடக்கத்திலேயே கோடை வெயில் வாட்டி வந்தது. கோடை வெயிலின் உச்சமான கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம், ஒவ்வொரு ஆண்டும் மே 4ம் தேதி தொடங்கும்; 28ம் தேதி நிறைவுபெறும். அந்த வகையில் 25 நாட்கள் நீடித்த கத்திரி வெயில் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன் சேலம், ஈரோடு, வேலூர், திருச்சி, திருப்பூர், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் 98 முதல் 102 பாரன்ஹீட் வரை வெயிலின் அளவு இருந்தது. இந்த 25 நாட்களில் கடந்த 6ம் தேதி வேலூரில் 105.98 டிகிரி வெயில் பதிவானது தான் அதிகபட்ச வெப்பமாகும்.

சென்னையில் அதிகபட்சமாக கடந்த மே 23 மற்றும் 24ம் தேதிகளில் 104 டிகிரி வெப்பம் பதிவானது. இந்த ஆண்டு பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலில் அவ்வப்போது பெய்யும் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனினும் கடந்த சில தினங்களாக கோடை வெயில் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைவதால் கோடை வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டில் அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இல்லாமல் விடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: