செங்கல்பட்டு அருகே பரபரப்பு பொதுமக்கள் சாலை மறியல்: அமைச்சர் சமரசத்தால் கலைந்து சென்றனர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அவர்களிடம் சமரசம் பேசியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு  மாவட்டம் மறைமலைநகர் அடுத்த நின்னகரை ராஜிவ் காந்தி நகரில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மேலும், அங்குள்ள மக்களுக்கு, எந்தவித முன் அறிவிப்புமின்றி வீடுகளின் மின்சாரத்தை துண்டிப்பதற்காக, மின்வாரிய  அதிகாரிகள் நேற்று சென்றனர். இதனை கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் அமர்ந்து, திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சாலையின் இரு மார்க்கத்திலும் சுமார் 2 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னையிலில் இருந்து  திருச்சி நோக்கி காரில் சென்ற  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் கார், போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதையடுத்து, காரில் இருந்து இறங்கிய அமைச்சர், சம்பவ இடத்துக்கு நடந்து சென்று, அங்கு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், நடந்த சம்பவத்தை  அமைச்சரிடம்  தெரிவித்தனர். மேலும், அதுதொடர்பாக கோரிக்கை மனுவை, அமைச்சரிடம் வழங்கினர்.

அதனை பெற்று கொண்ட அவர், உடனே, துறை சார்ந்த அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர், துறை சார்ந்த அமைச்சர், மாவட்ட நிர்வாகம், முதல்வர் உள்பட அனைவரிடமும் பேசி, நல்ல  முடிவு எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதைெதாடர்ந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், மறைமலைநகர் நகராட்சி அலவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு, எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், நகராட்சி தலைவர் சண்முகம் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, நல்ல முடிவு எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து,  சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: