தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

சென்னை: தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகளுக்காக வரும் பொதுமக்களை அதிகாரிகள்  அலைக்கழிப்பதாகவும், புரோக்கர்கள் மூலம் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்குவதாகவும் தொடர்ந்து புகார் எழுந்தது. இந்நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமசந்திரன், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மற்றும் அரசு உயரதிகாரிகள் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெரும்பாலான கோப்புகள் முடித்து வைக்கப்படாமல் நிலுவையில் இருந்தது தெரியவந்தது.

மேலும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனவும், நீண்ட நாட்கள் அலைக்கழித்து வருவதாகவும் அங்கிருந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, தாம்பரம் வட்டாட்சியர் பாலாஜி மற்றும் கோட்டாட்சியர் அறிவுடை நம்பி ஆகியோரை அழைத்த அமைச்சர், ‘‘தங்களின் இச்செயலுக்கு பணி நீக்கம்தான் செய்யவேண்டும். ஆனால் உங்களின் குடும்பநலனை கருதி எச்சரிக்கிறோம்.

பணிகளை முறையாக செய்யவேண்டும். மீண்டும் இதுபோன்ற புகார்கள் எழுந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட கூடாது என முதல்வர் கூறி உள்ளார். அதனை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். இந்த அலுவலகத்தில் ஏராளமான குறைகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு மாதத்தில் மீண்டும் வரும்போது அப்படி இருந்தால், கடும் நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படும்,’’ என்றார்.

Related Stories: