அதிமுக ஆட்சியில் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக புகார் 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் சமர்ப்பிக்காத ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது: மே 20ம் தேதியுடன் கெடு முடிந்ததாக அதிகாரிகள் தகவல்

வேலூர்: அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஊராட்சி செயலர்கள் நியமிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், 10ம் தேர்ச்சி சான்றிதழ் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க ஊராட்சி செயலர்களுக்கு மே 20ம் தேதி வரை கெடு வழங்கப்பட்டிருந்தது. தற்போது கெடு முடிந்த நிலையில், துறை ரீதியான விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளின் நிர்வாக பணிகளை ஊராட்சி செயலர்கள் கவனித்து வருகின்றனர். இவர்களுக்கான கல்வித்தகுதியாக கடந்த 2013ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த காலங்களில் இவர்கள் அந்தந்த கிராம ஊராட்சி மன்ற தலைவரால் சுயமாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தற்போது ரூ.25 ஆயிரம் முதல் ரூ.26 ஆயிரம் வரை ஊதியமாக பெறுகின்றனர்.

10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் காலியான ஊராட்சி செயலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அப்போது, பலரும் போலி சான்றிதழ்களை வழங்கியுள்ளதாகவும் ஏற்கனவே புகார்கள் எழுந்தன. இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து கிராம ஊராட்சி செயலர்களும் தங்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்களை உண்மை தன்மை அறிவதற்காக சமர்ப்பிக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை மூலம் உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், பல மாவட்டங்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமான கிராம ஊராட்சி செயலர்கள் தங்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் உட்பட அரசு கேட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்காமல் தட்டிக்கழித்து வந்தனர். அதேபோல் சமர்ப்பிக்கப்பட்ட பலரது கல்விச்சான்றிதழ்களும் போலியானவை என்பதும் கண்டறியப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாமலே ஊராட்சி செயலர்களாக பணியாற்றி வருபவர்களும், போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணியாற்றி வரும் ஊராட்சி செயலர்களும் குறுக்கு வழியில் தங்கள் பணியை உறுதிப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டு (2022) மே 5ம் தேதிக்குள் சான்றிதழ் சமர்ப்பிக்காதவர்கள் உடனடியாக அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்று கெடு விதித்தது. இந்த கெடுவை மே 20ம்தேதி வரை மீண்டும் நீட்டித்து அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் நகல்கள் சம்பந்தப்பட்ட அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மூலம் ஊராட்சி செயலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து உரிய சான்றிதழ்கள் சமர்ப்பிக்காதவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: