சென்னை விமான நிலையத்தில் சுமார் 8 நிமிடங்கள் சந்திப்பு பிரதமரிடம் ஓபிஎஸ், இபிஎஸ் பேசியது என்ன?: பரபரப்பு தகவல்கள்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சுமார் 8 நிமிடம் பிரதமரை சந்தித்து ஓபிஎஸ், எடப்பாடி பேசியது என்ன என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ₹31,500 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கட்டமைப்பு செயல் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக (ரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலை, பெட்ரோலியம் பைப் லைன் மற்றும் வீட்டு வசதி சார்ந்த திட்டங்கள்) பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த பிரமாண்ட விழாவில் இந்த திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர், நேற்று முன்தினம் இரவு 8.10 மணியளவில் அவர் விமானம் நிலையம் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் விஐபிக்கள் அறையில் தங்கியிருந்தார். அங்கு இரவு 9.10 மணி வரை விஐபிக்களை சந்தித்து பேசினார். அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 35 பேருக்கு அவர் அப்பாய்ன்மென்ட் கொடுத்திருந்தார்.

குறிப்பாக, மதுரை ஆதினம்  ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரியார் பிரதமரை சந்தித்து ேபசினார். அண்மைக்காலமாக குழப்பமான நிலையில் மதுரை ஆதினம் பேட்டி கொடுத்து வந்தார். இந்நிலையில் அவர் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ்குமார் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் சந்தித்து பேசினர். மேலும் தமிழக பாஜ முக்கிய தலைவர்கள் பிரதமரை சந்தித்து பேசினர். அப்போது தமிழக நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ேபசினர்.

தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகிய 7 பேர் சந்தித்து பேசினர். இதில் சால்வை அணிவித்து விட்டு ஓபிஎஸ், எடப்பாடியை தவிர மற்ற 5 பேரும் 2 நிமிடத்தில் வெளியே வந்து விட்டனர். தொடர்ந்து 8 நிமிடங்கள் வரை ஓ.பிஎஸ், இபிஎஸ் ஆகியோர் பிரதமரிடம் பேசினர்.

அப்போது கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நூல் விலையை குறைக்க வேண்டும். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உதான் திட்டத்தில் சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானம் இயக்கப்பட்டு வந்தது. இந்த விமானத்தை ஒன்றிய அரசு அண்மையில் திடீரென நிறுத்தியது. இந்த விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் உள்ளிட்டவை தொடர்பாக கோரிக்கை மனுவை அளித்தனர். தொடர்ந்து, அரசியல் நிலவரம் தொடர்பாக 2 பேரும் பிரதமரிடம் பேசியதாக தெரிகிறது. மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குகள் போடப்படுவதாக தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் பிரதமரிடம் தெரிவித்தனர். இதை பிரதமர் ரசிக்கவில்லை. மேலும் அவர்கள் கூறியதை அவர் கண்டுகொள்ளவே இல்லை. ஏனென்றால், அதிமுக ஆட்சியின் போது அதிமுக அமைச்சர்களின் நெருக்கமானவர்கள், கான்ட்ராக்டர்கள் வீடுகளில் வருமான வரித்துறை, அமலாக்க துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனை தொடர்பான பைல்கள் டெல்லியில் உள்ளது. இதனால், ஓபிஎஸ், இபிஎஸ் சொன்னதை பிரதமர் கேட்கவில்லை. தொடர்ந்து பாஜவுக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கும், கூட்டணி தொடரும் என்றும் அப்போது அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு, பிரதமர் ஒற்றுமையாக இருங்கள் என்று கூறினார். இது சசிகலாவை தான் இப்படி கூறுகிறார் என்று நினைத்து எடப்பாடி இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. சசிகலாவை விட தற்போது உள்ள அதிமுகவுக்குதான் செல்வாக்கு அதிகமாக உள்ளது. சசிகலாவுக்கு கொஞ்சம் கூட செல்வாக்கு இல்லை. ஏதோ செல்வாக்கு உள்ளது போல சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், இதை கட்சியினரும், மக்களும் ஆதரிக்கவில்லை. சசிகலா அதிமுகவில் குழப்பத்தை உருவாக்கி வருகிறார் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக சந்திப்பின் போது பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: