குட்கா, பான்மசாலாவுக்கு மேலும் ஓராண்டு தடை

சென்னை: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை விதித்து தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தல், பதுக்கல் போன்றவற்றிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் இந்த பொருட்களை இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். குட்கா பொருட்கள் குறைந்த விலையில் விற்பதும் இளைஞர்கள் அதை அதிகம் பயன்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்நிலையில் குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பொருட்களால் உடலுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

 நிக்கோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான பான்மசாலா உள்ளிட்ட புகைப்பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியவை என்பதால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கடந்த 2011ம் ஆண்டு முதல் இவற்றிற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்த தடை உத்தரவை கடைபிடிப்பதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்களை அழிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இவற்றுக்கான தடை கடந்த மே 23ம்தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருளுக்கு மேலும் ஓராண்டுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. இந்த தடையானது, கடந்த மே 23ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களின் அருகே இத்தகைய தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: