கடற்கரை ரயில் நிலைய விபத்து ஓட்டுநர் அதிரடி சஸ்பெண்ட்

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி மாலை மின்சார ரயில் பணிமனையில் இருந்து முதலாவது நடைமேடைக்கு வந்தது‌. இதனை கேரளாவை சேர்ந்த ஓட்டுநர் பவித்திரன் ஓட்டி வந்தார். அப்போது திடீரென மின்சார ரயில் ஓட்டுநர் பவித்திரனின் கட்டுப்பாட்டை இழந்து, நடைமேடையில் ஏறி, எதிரே இருந்த கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த சம்பவத்தின்போது ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால், உயிர் சேதம் ஏற்படவில்லை. மேலும், விபத்தில் 2 பெட்டிகள் சேதமடைந்தன. சுமார் 9 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு, சேதமடைந்த ரயில் பெட்டிகள் மீட்கப்பட்டு, அங்கிருந்து அகற்றப்பட்டன. இதையடுத்து, மறுநாள் அதிகாலை முதல் அந்த நடைமேடையில் இருந்து வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டன.

விபத்து தொடர்பாக கடற்கரை ரயில் நிலைய மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், விபத்துக்குள்ளான ரயிலின் ஓட்டுநர் பவித்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்த, மூத்த எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், மூத்த மெக்கானிக்கல் இன்ஜினியர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உயரதிகாரி ஒருவர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவை தெற்கு ரயில்வே பாதுகாப்பு பிரிவு அமைத்தது. இந்த குழு விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, தனது விசாரணையை மேற்கொண்டது. அதில் ஓட்டுநர் கவனக்குறைவாக பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை பிடித்ததே ரயில் விபத்திற்கு காரணம் என தெரியவந்தது.தொடர்ந்து அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், ரயில் ஓட்டுநர் பவித்திரனை பணியிடை நீக்கம் செய்துள்ளது. நடைபாதை மீது ரயில் ஏறியதற்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என குழு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: