ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: லடாக்கில் சோகம்

ஸ்ரீநகர்: லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஆற்றில் விழுந்ததில் 7 வீரர்கள் பலியாகினர்.ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் ராணு வீரர்கள், அடிக்கடி முகாம்கள் மாற்றப்படுவது வழக்கம். இதன் காரணமாக, ஒரு முகாமில் இருந்து மற்றொரு  முகாமுக்கு வாகனங்களில் அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.இதுபோல், லடாக்கில் உள்ள பர்தாபுர் என்ற இடத்தில் இருந்து ஹனிப் என்ற இடத்தில் உள்ள எல்லை முகாமுக்கு நேற்று காலை 26 வீரர்கள் ராணுவ வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, அவர்கள் சென்ற வாகனம் திடீரென சாலையில் இருந்து வழுக்கிச் சென்று, 60 அடி பள்ளத்தில் உள்ள சியோக் ஆற்றில் கவிழ்ந்தது. இதில், 7 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், பல வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் நடவடிக்கையில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்த மீட்பு பணியி்ல விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்ேவறு கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளன.

நடிகையை கொன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் நேற்றும் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் தேடி பிடித்து கொன்றன. ஜம்முவில் கடந்த புதன்கிழமை இரவு பிரபல டிவி நடிகையான அம்ப்ரின் பட்டை சுட்டுக் கொன்ற 2 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளையும், மற்றொரு இடத்தில் இதே அமைப்பை சேர்ந்த மேலும் 2 தீவிரவாதிகளையும் பாதுகாப்பு படைகள் சுட்டுக் கொன்றன. கடந்த 3 நாட்களில் மட்டுமே பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

Related Stories: