விசா முறைகேடு தொடர்பாக 2ம் நாளாக சிபிஐ விசாரணை எங்கள் குரலை ஒடுக்க முயற்சி: மக்களவை சபாநாயகருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்

புதுடெல்லி: சீனா பணியாளர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்திடம் இரண்டாவது நாளாக நேற்று ஒன்பது மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.சீனா நாட்டில் இருந்து 263 பேர் இந்தியாவுக்கு அழைத்து வர முறைகேடாக விசா வாங்கி கொடுக்க ரூ.50லட்சம் தொகையை லஞ்சமாக பெற்றுள்ளதாகவும், இதே காலக்கட்டத்தில் வெளிநாடுகளுக்கும் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனையை செய்துள்ளதாகவும் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ கடந்த வாரம் புதிய வழக்கு செய்தது. இதையடுத்து கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தி, ஆடிட்டர் பாஸ்கர ராமன் என்பவரை மட்டும் கைது செய்தது.  இதுதொடர்பாக சம்மன் அனுப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். நேற்று 2வது நாளாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜரானார். இதையடுத்து சீனா விசா வாங்கி கொடுத்த விவகாரம் மற்றும் ரூ.50லட்சம் லஞ்சமாக பெறப்பட்டது ஆகியவை தொடர்பாக சுமார் ஒன்பது மணி நேரம் கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.

இந்நிலையில்,  கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததாக என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நானும், எனது குடும்பத்தினரும் ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளால் பதிவு செய்யப்படும் போலி வழக்குகளால் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதன்மூலம், எங்களின் எதிர்ப்பு குரல்களை ஒடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை குறிவைத்து மிரட்டுவது அவருக்கு இருக்கும் சிறப்புரிமையை மீறுவதாகும். எனது தலையீடு எதுவும் இல்லாத 11 ஆண்டு கால பழைய வழக்கிற்காக சிபிஐ எனது டெல்லி இல்லத்தில் சமீபத்தில் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது ரகசியம் காக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் நாடாளுமன்ற குழுவில் உறுப்பினராக இருக்கக்கூடிய தான் எழுதிவைத்த குறிப்புகள், ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி சீல் வைத்துள்ளனர். இது நாடாளுமன்றத்துக்கான சிறப்பு உரிமையை மீறும் செயலாகும். இந்த பிரச்னை குறித்து உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: