வடகொரியா மீதான தீர்மானம் தோல்வி வீட்டோ அதிகாரத்தில் வீழ்த்திய சீனா, ரஷ்யா: அமெரிக்கா ஏமாற்றம்

ஐநா: வட கொரியா மீது கூடுதல் தடைகளை விதிக்கும் வகையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தோற்கடித்தன.ஐநா போன்ற சர்வதேச அமைப்புகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் அது ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுநாள் வரை வட கொரியா 23 முறை ஏவுகணை பரிசோதனைகளை செய்து உள்ளது. சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தென் கொரியாவுக்கு அரசு முறை சுற்றுப் பயணம் சென்றார். அவர் அந்த நாட்டில் இருந்து புறப்பட்ட சென்ற  சில மணி நேரத்தில், வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்பட 3 ஏவுகணைகளை ஏவி அடுத்தடுத்து சோதனை நடத்தியது.

இது மேற்கத்திய நாடுகளுக்கு அச்சம் விளைவித்துள்ள நிலையில், வட கொரியாவின் மீதான கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முடிவு செய்தது. அதற்கான தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா நேற்று கொண்டு வந்தது. 15 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் 13-2 என்ற அடிப்படையில் தீர்மானம் தோல்வி அடைந்தது. மற்ற நாடுகள் ஆதரித்து வாக்களித்த நிலையில், ரஷ்யாவும், சீனாவும் தங்கள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை தோற்கடித்து வட கொரியாவை காப்பாற்றின. இதனால், அமெரிக்கா ஏமாற்றம் அடைந்தது.

Related Stories: