ஆண்டுக்கு ஆண்டு புழக்கம் குறைகிறது 2,000 நோட்டுகள் பதுக்கல்: ரோஸ் கலர் நோட்டை பார்ப்பதே அரிதாகி விட்டது

புதுடெல்லி: கடந்த 2016ம் ஆண்டில் புழக்கத்தில் விடப்பட்ட ₹2,000 நோட்டுகளின் எண்ணிக்கை படிப்படியாக சரிந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 64 கோடி ₹2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து மாயமாகி இருக்கின்றன. இவை எங்கே போனது என்று தெரியவில்லை; பதுக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.  நாட்டில் கறுப்பு பணத்தை ஒழிக்க, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். அன்றைய இரவில் இருந்தே ₹500, ₹1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இவைகளுக்கு பதிலாக புதிதாக ₹2000 நோட்டும், புதிய ₹500 நோட்டுகள் அமலுக்கு கொண்டு வரப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய நோட்டுக்களை மாற்ற, வங்கிகளில் மக்கள் மைல் கணக்கில் வரிசையில் காத்துக்கிடந்தனர். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட ஓரிரு நாளில் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்பிறகு ரூ.2000 நோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருந்தன. வங்கி, ஏடிஎம் என எங்கு சென்றாலும் ரூ.2000 நோட்டுகள் அதிகளவில் விநியோகிக்கப்பட்டு வந்தன. இந்த நிலை, 2020ம் ஆண்டுக்கு பிறகு தலைகீழாக மாறி விட்டது. 2020ம் ஆண்டுக்குப் பிறகு அதிக மதிப்புள்ள ₹2000 நோட்டுகளின் புழக்கம் குறைந்தது. வங்கி, ஏடிஎம்களில் ரூ.2000 நோட்டுக்களை பார்ப்பதே அரிதானது. தட்டுப்பாடு காரணமாக ₹2000 நோட்டுக்களை விநியோகிப்பதில்லை என வங்கிகள் விளக்கம் அளித்தன. புழக்கத்தில் குறைந்தாலும், புதிதாக ₹2000 நோட்டுக்களை அச்சிடும் திட்டமில்லை என ஒன்றிய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டுக்கான ஆண்டறிக்கையை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அதில், 2022 மார்ச் மாத கணக்கெடுப்பின்படி, புழக்கத்தில் உள்ள ₹2000 நோட்டுக்களின் எண்ணிக்கை 214 கோடியாக சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த ரூபாய் நோட்டுக்களில் 1.6 சதவீதமாக இது குறைந்து விட்டது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் புழக்கத்தில் விடப்பட்ட ₹2000 நோட்டுகளின் மொத்த எண்ணிக்கை 274 கோடியாகும். இது புழக்கத்தில் இருந்த மொத்த நோட்டுக்களில்  2.4 சதவீதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2021ம் ஆண்டு 245 எண்ணிக்கையாகவும், மொத்த நோட்டுகளின் புழக்கத்தில் 2 சதவீதமாகவும் சரிந்தது. தற்போது 214 கோடி ரூ.2000 நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 64 கோடி ₹2000 நோட்டுகள் எங்கே போனது என்று தெரியவில்லை. மேலும், மொத்த ரூபாய் மதிப்பில் ₹2000 நோட்டுக்களின் மதிப்பும் 22.6 சதவீதம் குறைந்து விட்டது.

அதே சமயம், புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. கடந்த 2021ல் மொத்த ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு ரூ.28.27 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இது ரூ.31.05 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், ரூ.500 நோட்டுக்களின் எண்ணிக்கை 3,867.90 கோடியில் இருந்து 4,554.68 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த மதிப்பில் ரூ.2000 மற்றும் ₹500 நோட்டுகள் 87.1 சதவீதம் உள்ளன. கடந்த ஆண்டு இது 85.7 சதவீதமாக இருந்தாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 9 வாரங்களாக தொடர்ந்து சரிந்து வந்தது. இந்த காலகட்டத்தில் சுமார் ₹4 லட்சம் கோடி வரை சரிந்து, கடந்த 13ம் தேதி நிலவரப்படி, ₹44.49 கோடி அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்தது. இந்நிலையில், கடந்த 20ம் தேதியுடன் முடிந்த கடந்த வார நிலவரப்படி, அந்நிய செலாவணி கையிருப்பு ஏற்றம் கண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது ₹31,725 கோடி அதிகரித்து, மொத்த கையிருப்பு ₹44.81 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

Related Stories: