சூறைக்காற்றுடன் கனமழை கடலூரில் 2 லட்சம் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

கடலூர்:  கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் ராமாபுரம், வழிசோதனை பாளையம், பத்திரக்கோட்டை, எம். புதூர், வெள்ளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500  ஏக்கரில் விவசாயிகள் வாழை பயிரிட்டிருந்தனர். இந்நிலையில், கடலூரில் நேற்று முன்தினம் காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். காலை 10 மணி முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சிலர் அன்றாட பணிகளையே செய்ய முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில் இரவு 8 மணிக்கு மேல் திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. காற்று பலமாக வீசியதால் ராமாபுரம், வழிசோதனைபாளையம், வெள்ளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 300 ஏக்கரில் பயிர் செய்திருந்த 2 லட்சத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் சாய்ந்தன. பல இடங்களில் வாழைத்தோட்டங்கள் அடியோடு சாய்ந்திருந்தன. வாழை பயிரிட்டு, நன்றாக பராமரித்து, தற்போது குலை தள்ளும் நிலையில் இருக்கும்போது, சூறாவளி காற்றினால் மரங்கள் சாய்ந்து இருப்பது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் கடலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்யும்போது வாழை மரங்கள் சாய்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால் தங்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படுவதால், அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:நாங்கள் கடந்த 10 மாதங்களாக வாழை பயிரிட்டு, அதற்கு தேவையான உரமிட்டு, முறையாக நீர்பாய்ச்சி பராமரித்து வந்தோம். ஏக்கருக்கு பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். வாழை மரங்கள் சாயாமல் இருக்க சவுக்கு கழிகள் கட்டி வைத்திருந்தோம். இருப்பினும் இந்த சூறாவளி காற்றில் மரங்கள் சாய்ந்து விட்டன.தற்போது வாழை குலை தள்ளும் நிலையில் இருக்கும்போது, சூறை காற்றினால், நாங்கள் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள் சாய்ந்து விட்டன. இதனால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளோம். ஏற்கனவே எங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறோம். இந்நிலையில் வாழை மரங்கள் சாய்ந்து இருப்பது எங்களுக்கு மேலும் வேதனையை தருகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக எங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.100 கோடி இழப்பு: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டத்தில் சூறைகாற்றினால் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான குலை தள்ளிய வாழைகள் முறிந்து விழுந்துள்ளன. இன்னும், ஓரிரு மாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் வாழைகள் முறிந்து விழுந்ததால், கடன் வாங்கிய பணத்திற்கு வட்டியை எப்படி கட்டுவது என்று தெரியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனர்.  ஒரு ஏக்கரில் வாழைகள் பயிரிடப்படுவதற்கான உற்பத்தி செலவு ரூ.4.5 லட்சம் வரை செலவாகிறது. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக சேதப்பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளின் பாதிப்பை கணக்கிட்டு, அதற்கான இழப்பீடை போர்க்கால அடிப்படையில் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். அதோடு விவசாய காப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: