கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி: நியமன கடிதத்தை தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா வழங்கினார்

சென்னை:  சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கிராண்ட் மாஸ்டர் ரமேஷ் பாபு பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் காந்த் மாதவ் வைத்யா பணிக்கால அடிப்படையிலான பணி நியமன கடிதத்தை வழங்கினார். இதில், தெற்கு மண்டல செயல் இயக்குனர் சைலேந்திரா, செயல் இயக்குனர் மற்றும் மாநில தலைவர் அசோகன், கிராண்ட் மாஸ்டர் சசிகரன், கிராண்ட் மாஸ்டர் கார்த்திகேயன் முரளி மற்றும் பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் கிராண்ட் மாஸ்டர் ரமேஷ் மற்றும் பிற முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் காந்த் மாதவ் வைத்யா கூறியதாவது:சதுரங்க ஆட்டத்தில் மற்றும் பிற விளையாட்டுகளில் சாதிக்க விரும்பும் இளையோருக்கு முன்மாதிரியாக விளங்கும் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை உறுப்பினர் ஆக்கியதில் இந்தியன்ஆயில் நிறுவனம் பெருமை கொள்கிறது.   நாட்டின் பல தரப்பட்ட விளையாட்டுகளை சார்ந்த உலக சாம்பியன்களை உருவாக்கும் வகையில் கடந்த மூன்று பத்தாண்டுகளாக இப்பொழுது வரை இளம் விளையாட்டு திறமையாளர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் ஊக்கம் அளித்து வருகிறது.  நாடெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்களை மேம்படுத்தும் வகையில் அவர்களை  பணியில் அமர்த்தி வருகிறது. சமூகப் பொறுப்புணர்வு பணிகள் மூலமாக, விளையாட்டுகளை ஊக்குவிக்க நிறுவனம் மேற்கொண்டுள்ள செயல்களுக்காக, இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு “ராஷ்ட்ரீய ப்ரோத்சாஹன் புரஸ்கார்” வழங்கப்பட்டது.

சமூகப் பொறுப்புணர்வு மிக்க நிறுவனமாக இந்தியன் ஆயில் நிறுவனம், 19 வயதிற்குட்பட்ட இளம் தலைமுறையினரை கண்டெடுத்து ஊக்கம் அளிக்கும் வகையிலும் அவர்கள் வருங்காலத்தில் தலைசிறந்த விளையாட்டு வீரர்களாக திகழ ஸ்காலர்ஷிப் திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. சதுரங்க சாம்பியனை வரவேற்பதிலும் அவரது சாதனையை அங்கீகரிப்பதிலும் இந்தியன்ஆயில் நிறுவனம் பெருமை கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: