முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு 3 திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 3 பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று மனு தாக்கல் செய்தனர். திமுக சார்பில் சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 19ம் தேதி அறிவித்தார். திமுக கூட்டணி சார்பில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, திமுக வேட்பாளர்கள் 3 பேரும் நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகம் வந்தனர். அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது அறையில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதையடுத்து நேற்று மதியம் 12.15 மணிக்கு முதல்வர் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தின் செயலாளரும் தேர்தல் அதிகாரியுமான கி.சீனிவாசனிடம் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிர் அணி செயலாளர் கனிமொழி மற்றும் திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.நீண்ட இழுபறிக்கு பிறகு, அதிமுக சார்பில் 2 மாநிலங்களவை எம்பி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 25ம் தேதி அறிவிக்கப்பட்டனர். அதன்படி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் ஆர்.தர்மர் ஆகிய இரண்டு பேரை கட்சி தலைமை அறிவித்தது. இவர்கள் அறிவிப்புக்கு கட்சியில் உள்ள முன்னணி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்களை கட்சி தலைமை சமாதானப்படுத்தி வருகிறது. இதனால், அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வது காலதாமதம் ஆகி வருகிறது.

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய, வருகிற 31ம் தேதி (செவ்வாய்) மாலை 3 மணி வரை காலஅவகாசம் உள்ளது. அதனால் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருகிற திங்கள் அல்லது செவ்வாய் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது.வேட்புமனுக்கள் மீது ஜூன் 1ம் தேதி பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை ஜூன் 3ம் தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 6 பேருக்கு மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தால், ஜூன் 10ம் தேதி தலைமை செயலகத்தில் உள்ள, சட்டமன்ற குழுக்கள் அறையில் தேர்தல் நடைபெறும். 6 பேர் மட்டுமே போட்டியிட்டால், ஜூன் 3ம் தேதி (புதன்) மாலை 3 மணிக்கு போட்டியின்றி 6 பேரும் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய, வருகிற 31ம் தேதி (செவ்வாய்) மாலை 3 மணி வரை காலஅவகாசம் உள்ளது. அதனால் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருகிற திங்கள் அல்லது செவ்வாய் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories: