தேவதானப்பட்டி பகுதியில் கனமழை; சூறைக்காற்றுக்கு வாழை, வெற்றிலை கொடிக்கால் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி பகுதியில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு வெற்றிலை கொடிக்கால், வாழை, தென்னைமரங்கள் ஒடிந்து சேதமாகின. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, குள்ளப்புரம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, நாகம்பட்டி, நல்லகருப்பனப்பட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட இடங்களில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சூறைக்காற்றுக்கு ஆங்காங்கே தென்னை மரங்கள் ஒடிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததால் மின்கம்பங்கள் ஒடிந்தன. சில்வார்பட்டியில் உள்ள வெற்றிலை கொடிக்கால் பல இடங்களில் வேறொடு ஒடிந்து விழுந்து முற்றிலும் சேதமானது.

அதே போல் வாழை மரங்களும் ஒடிந்து விழுந்தன.

இதுகுறித்து சில்வார்பட்டி விவசாயிகள் நலச்சங்க பொருளாளர் எஸ்.முத்துக்காமாட்சி கூறுகையில், ‘நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு பல இடங்களில் வெற்றிலை கொடிக்கால் மற்றும் வாழை, தென்னை மரங்கள் ஒடிந்து விழுந்தன. இதில் விளைநிலங்களுக்குள் மின்வயர்கள் மீது மரங்கள் விழுந்து வயர்கள் அறுந்துவிட்டன. ஒரு ஏக்கர் வெற்றிலை கொடிக்கால் சாகுபடிக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். இந்நிலையில், சூறைக்காற்றுக்கு வாழை, தென்னை, வெற்றிலை கொடிக்கால் சேதமானதால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நேரடியாக பார்வையிட்டு உரிய சேத மதிப்பு இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: