ஓட்டப்பிடாரம் அருகே சொத்து தகராறில் பயங்கரம்; தம்பி சரமாரி குத்திக் கொலை: ராணுவ வீரர் வெறிச்செயல்

ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம், மேல முடிமண், பெருமாள் கோயில் தெருவைச் சேரந்த லட்சுமண பெருமாள் மகன் கார்த்திக் (22). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மாலினி. மகள் மகி (2). கார்த்திக்கின் உடன்பிறந்த அண்ணன் செல்வகுமார். காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாத்தூர் அருகே அமீர்பாளையத்தைச் சேர்ந்த ஜெயபாண்டி மகள் ஜெயந்தி. செல்வகுமார் தற்போது விடுமுறையில் வந்துள்ளார். மனைவியின் ஊரான சாத்தூரில் குடும்பத்துடன் உள்ளார்.

கார்த்திக்கிற்கு அவரது தாய் கற்பகம் மூன்றரை பவுன் நகையும், ரூ.1.50 லட்சமும் கொடுத்துள்ளார். இதையறிந்த செல்வகுமார், தாயிடம், தம்பிக்கு கொடுத்தது போல் தனக்கும் நகையும், பணமும் வேண்டும் என்று நெருக்கடி கொடுத்துள்ளார். அதற்கு தாய் தன்னிடம் தற்போது பணம் இல்லை என்று கூறியுள்ளார். தம்பி உயிருடன் இருந்தால், தனக்கு சொத்து கிடைக்காது என்று நினைத்த செல்வகுமார், தம்பியை தீர்த்துக் கட்ட திட்டமிட்டார்.

அதன்படி நேற்றிரவு சுமார் 11.30 மணி அளவில், தந்தை லட்சுமணபெருமாளிடம், செல்போனில் பேசிய செல்வகுமார், தம்பியை கொல்லப் போவதாக கூறியுள்ளார். அப்போது கொப்பம்பட்டி கிராமத்திற்கு கார்த்திக், அவரது தாய் கற்பகம், கார்த்திக்கின் மாமனார் ஆகியோர் ஒரு விருந்துக்கு சென்றிருந்தனர். லட்சுமண பெருமாளிடம் செல்போனில் செல்வகுமார் கூறியதை அறிந்த கார்த்திக்கின் மாமனார், கார்த்திக்கிடம், செல்வகுமார், கொலைவெறியுடன் அலைவதாகவும், ஜாக்கிரதையாக இருக்கும்படியும் கூறியுள்ளார். இதையடுத்து கார்த்திக், அவரது தாய் கற்பகம், உறவினர்கள் சிவா என்ற சுடலைமணி, கண்ணன் ஆகிய 4 பேரும் கொப்பம்பட்டியிலிருந்து மேல முடிமண் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் தந்தை லட்சுமணபெருமாள் வீட்டுக்கு சென்ற செல்வகுமார், அவரிடம் தகராறு செய்து, தான் வாங்கிக் கொடுத்த பொருட்கள் எதுவும் இங்கு இருக்கக் கூடாது என்று கூறி டி.வி.யை கீழே போட்டு உடைத்துள்ளார். இதைப் பார்த்த லட்சுமணபெருமாள் சத்தம் போடவே, அவரை தாக்க செல்வகுமார் முயற்சித்தார். இதில் பயந்து போன அவர் அங்கிருந்து உறவினர் சண்முகராஜ் என்பவரின் வீட்டுக்கு ஓடினார். இதற்குள் கார்த்திக்கும், கண்ணனும் அங்கு வந்து விடவே, இருவரும் தந்தையை விரட்டிச் செல்லும் செல்வகுமாரை பிடிக்க பாய்ந்தோடினர்.

அப்போது அவர், அவதூறான வார்த்ைதகளால் கார்த்திக்கை திட்டியதோடு, நீ உயிருடன் இருக்கும் வரை எனக்கு எந்த சொத்தும் அம்மா, அப்பாவிடம் இருந்து கிடைக்காது என்று கூறிக் கொண்டே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், கார்த்திக்கை சரமாரியாக குத்தினார். இதை தடுத்த கண்ணனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதை பார்த்த கார்த்திக்கின் மனைவி மாலினி, தாய் கற்பகம், உறவினர்கள் கண்ணன், சுடலைமணி ஆகியோர் கூச்சல் போடவே, செல்வகுமார் பைக்கில் தப்பியோடி விட்டார்.

கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த கார்த்திக்கை ஒரு காரில் ஏற்றிக் கொண்டு மாலதி மற்றும் உறவினர்கள் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மாலதி ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ முத்துராஜா வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துராமன் விசாரணை நடத்தி செல்வகுமாரை கைது செய்தார். சொத்து தகராறில் தம்பியை அண்ணனே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: