×

காவல்துறை நம் நண்பன் என்று சொல்லும் வகையில் காவலர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறை, ஊழல் தடுப்பு, கண்காணிப்பு, தீயணைப்பு, மீட்புப்பணி காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார். காவல்துறையினர் 319 பேருக்கு முதல்வர் பதக்கங்களை வழங்கினார். பின்னர் பேசிய முதல்வர்; பதக்கங்கள் பெற்ற அனைத்து காவல் வீரர்களையும் பாராட்டுகிறேன். மேலும் பல்வேறு பதக்கங்களையும் காவலர்கள் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். காவல்துறை மக்களின் நெருக்கமாக இருந்தால் தான் நாட்டில் குற்றம் குறையும்.

தமிழ்நாடு அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், மற்றோரு கை காவல்துறை. காவல்துறை நம் நண்பன் என்று சொல்லும் வகையில் காவலர்கள் செயல்பட வேண்டும். காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்கித் தருவதாக இருக்க வேண்டும். காவல்துறையை தலைநிமிர வைக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு காவலருக்கும் இருக்க வேண்டும். பொதுமக்கள் அச்சம் தரும் சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போதைப் பொருட்கள் நடமாட்டம் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.

கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதால் தான் புதிய தொழில் நிறுவனங்கள் வருகின்றன. அமைதியான சூழ்நிலையில் தான் தொழில் வளர்ச்சி ஏற்படும். எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக திராவிட  மாடல் ஆட்சியை தமிழகத்தில் வழங்கி வருகிறோம். இவ்வாறு கூறினார்.


Tags : MK Stalin , The police must act in such a way as to say that the police are our friend: Chief MK Stalin's advice
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...