தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை 33%ஆக உயர்த்த நடவடிக்கை: வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தகவல்..!

சென்னை: தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (27.05.2022) தலைமைச் செயலகத்தில் உள்ள தொழில்துறை கூட்ட அரங்கில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமசந்திரன் அவர்கள் தலைமையில் வனத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் சட்டமன்ற அறிவிப்புகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக வனத்துறைக்கு சொந்தமான 229 நாற்றாங்கால்களில் நடப்பாண்டு 1.77 கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை இன்னும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நர்சரிகள் மூலம் குறைந்த மதிப்பீட்டில் அதிகளவு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யவும், ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதத்திற்குள் மரக் கன்றுகளை நடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளையும் குறித்த காலத்தில் நிறைவேற்றுவதற்கு அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்.

வனப் பாதுகாப்பிற்காக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட மோப்ப நாய் பிரிவு விரைவில் தொடங்கப்பட வேண்டும். அதேபோல கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு சிறப்புப் ரோந்து பிரிவினை தொடங்கி, பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்றும் அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர்  திரு.கா.ராமசந்திரன் அவர்கள் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்) திரு.சையத் முஜம்மில் அப்பாஸ், இ.வ.ப.,  முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்/தலைமைச் செயல் அலுவலர் (கேம்பா) திரு.சுப்ரத் மஹாபத்ர, இ.வ.ப., வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்கள், சரக வனப் பாதுகாவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: