மோடி பேசுவதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை: தேவகவுடாவை சந்தித்த பின் சந்திரசேகர ராவ் புகார்

புதுடெல்லி: தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான சந்திர சேகர ராவ், நேற்று பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்தார். அப்போது மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி உடனிருந்தார். இந்த சந்திப்புக்கு பின் சந்திரசேகர ராவ் கூறுகையில், ‘நாடு மோசமான நிலையை நோக்கி செல்வதால், நாம் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். விவசாயிகள், தலித்துகள், என யாரும் மகிழ்ச்சியாக இல்லை. பிரதமர் மோடி பேசுவதை தவிர வேறு எதுவும் செய்வதில்லை. வெறும் வாக்குறுதிகள் மட்டும் கொடுக்கிறார்கள்.

தொழில் நிறுவனங்கள் மூடப்படுகின்றன. நாட்டின் வளர்ச்சி சரிவை சந்தித்து வருகிறது. பணவீக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது. பண மதிப்பு முழுமையாக சரிந்து வருகிறது. வரலாற்றில் பண மதிப்பு இவ்வாறு வீழ்ந்தது எப்போதும் நடக்கவில்லை’ என்றார். தொடர்ந்து குமாரசாமி கூறுகையில், ‘இன்னும் 2, 3 மாதங்களில் நல்ல செய்தி கிடைக்கும். மாநில கட்சிகள் வளர்ந்து வருகின்றன. பாஜகவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் தங்களின் கருத்து வேறுபாடுகளை மறந்து நாட்டின் நலனுக்காக ஓரணியில் திரள வேண்டும். காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருகிறது. சந்திரசேகர ராவ் மேற்கொண்டுள்ள முயற்சி நல்ல பலனை கொடுக்கும்’ என்றார்.

Related Stories: