நடிகையை கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் உட்பட 3 நாளில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஜம்மு காவல் அதிகாரி தகவல்

ஜம்மு: இன்று அதிகாலை 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாளில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜம்மு காவல் அதிகாரி தெரிவித்தார்.  ஜம்மு - காஷ்மீரின் சோர் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார், ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர் அடங்கிய பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு நேற்று இரவு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட கட்டடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அந்தக் கட்டடத்தை சுற்றி தங்கியிருந்த பொதுமக்களை அங்கிருந்து வேறு பகுதிக்கு பாதுகாப்புப் படையினர் வெளியேற்றினர். பின்னர், தீவிரவாதிகளை சரணடையுமாறு பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தினர்.

ஆனால், இதனை ஏற்காத தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். பல மணிநேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து காஷ்மீர் ஐஜிபி விஜயகுமார் கூறுகையில், ‘நேற்றிரவு நடந்த என்கவுன்டரில் சோர் பகுதியில் 2 லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1 ஏகே 47 மற்றும் ஒரு கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. அவந்திபோரா என்கவுன்டரில், தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட் கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த 3 நாட்களில் மொத்தம் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் 7 பேர் லஷ்கர் இ தொய்பா, 3 பேர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள்’ என்றார்.

Related Stories: